விழுப்புரத்தில் பட்டப்பகலில் துணிகரம்:ஆசிரியையின் ஸ்கூட்டரில் இருந்த ரூ.1 லட்சம் திருட்டு2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

விழுப்புரத்தில் ஆசிரியையின் ஸ்கூட்டரில் இருந்த ரூ.1 லட்சத்தை திருடிச்சென்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-05-06 18:45 GMT


விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் இந்திரா நகரை சேர்ந்தவர் ஆல்பர்ட் மனைவி ஜூலியட்ஜாய் (வயது 56). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதியில் தங்கியிருந்து அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். வாரத்திற்கு ஒருமுறை இவர் விழுப்புரம் வந்து செல்வார்.

திண்டுக்கல் மாவட்டம் உச்சனம்பட்டியை சேர்ந்த மாணிக்கராஜ் (36) என்பவர் தற்போது கொடைக்கானலில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் இதற்கு முன்பு கல்வராயன்மலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியபோது ஆசிரியர் ஜூலியட்ஜாயிடம் இருந்து கடனாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை வாங்கியிருந்தார். அந்த கடன் தொகையை கொடுப்பதற்காக மாணிக்கராஜ் நேற்று காலை விழுப்புரம் வந்தார்.

ரூ.1 லட்சம் திருட்டு

இவர், ஆசிரியை ஜூலியட்ஜாயை தொடர்புகொண்டு விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்திற்கு பின்புறம் வரவழைத்தார். அதன்படி அங்கு வந்த ஜூலியட்ஜாயிடம் வாங்கிய கடனில் ரூ.1 லட்சத்தை மட்டும் மாணிக்கராஜ் கொடுத்தார். உடனே ஜூலியட்ஜாய், அந்த பணத்தை எண்ணிப்பார்த்து தனது ஸ்கூட்டரின் இருக்கை பெட்டியில் வைத்தார்.

அதன் பிறகு அவர்கள் இருவரும் அங்கிருந்து புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள ஒரு ஓட்டலுக்கு காபி சாப்பிட சென்றனர். பின்னர் சிறிது நேரம் கழித்து அங்கிருந்து வெளியே வந்த மாணிக்கராஜ், திண்டுக்கல்லுக்கு பஸ் ஏறி சென்றுவிட்டார். பின்னர் ஜூலியட்ஜாய் அங்கிருந்து புறப்பட்டு மீன் கடைக்கு சென்று மீன் வாங்கிவிட்டு வீட்டுக்கு சென்றார். அங்கு ஸ்கூட்டரின் பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் வைத்திருந்த ரூ.1 லட்சம் ரொக்கம் காணாமல் போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

2 பேருக்கு வலைவீச்சு

இதுகுறித்து அவர், விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள ஓட்டலில் இருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்ததில், யாரோ 2 பேர், ஆசிரியை ஜூலியட்ஜாயின் ஸ்கூட்டர் பெட்டியை கள்ளச்சாவி மூலம் திறந்து பணத்தை நைசாக திருடிச்சென்றது தெரியவந்தது.

இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிச்சென்ற 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர திருட்டு சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்