டெம்போ கவிழ்ந்து தொழிலாளி பலி

வெள்ளமடம் அருகே டெம்போ கவிழ்ந்ததில் தொழிலாளி பரிதாபமாக பலியானார்.

Update: 2023-04-26 21:07 GMT

ஆரல்வாய்மொழி:

வெள்ளமடம் அருகே டெம்போ கவிழ்ந்ததில் தொழிலாளி பரிதாபமாக பலியானார்.

நுங்கு வெட்ட சென்றனர்

களியக்காவிளை அருகே உள்ள குளப்புறம் கொல்லன்விளை வீட்டை சேர்ந்தவர் சாமுவேல் (வயது58). இவர் நெல்லை மாவட்டம் தெற்கு வள்ளியூரில் பனை மரங்களை குத்தகைக்கு எடுத்து அதில் நுங்கு வெட்டி விற்பனை செய்துவருகிறார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் ஒரு டெம்போவில் வள்ளியூர் சென்று நுங்கு வெட்டி எடுத்து கொண்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். டெம்போவை சாமுவேல் மகன் சேம் ஜெனிஸ் (28) ஓட்டினார். அதில் சாமுவேல் மற்றும் அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ், தங்கப்பன், தொழிலாளியான கிறிஸ்துதாஸ்(52) ஆகியோர் இருந்தனர்.

டெம்போ கவிழ்ந்தது

டெம்போ வெள்ளமடம் பகுதியில் உள்ள 4 வழிச்சாலை சுங்கச்சாவடி அருகில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென டெம்போவின் இடது பின்பக்க டயர் வெடித்தது. இதில் டெம்போ கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

இந்த விபத்தில் டெம்போவின் முன்பக்க கேபினில் இருந்த மெதுகும்மல் அருகே உள்ள செம்மான்விளையை சேர்ந்த கிறிஸ்துதாஸ், சாமுவேல் ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர்.

தொழிலாளி பலி

இதைகண்ட அக்கம் பக்கத்தினர் உடனே அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கிறிஸ்துதாசை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கும், சாமுவேலை தனியார் ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர். இதில் கிறிஸ்துதாஸ் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். சாமுவேலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்