மின்னல் தாக்கியதில் கோவில் கோபுர கலசம் உடைந்தது
கன்னியாகுமரி அருகே மின்னல் தாக்கி கோவில் கோபுர கலசம் உடைந்தது. மாவட்டத்தில் மழை நீடித்து வருவதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து உபரிநீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.
நாகர்கோவில்,
கன்னியாகுமரி அருகே மின்னல் தாக்கி கோவில் கோபுர கலசம் உடைந்தது. மாவட்டத்தில் மழை நீடித்து வருவதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து உபரிநீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.
மழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும் மாவட்டத்தின் பல இடங்களில் மழை பெய்தது. கன்னியாகுமரி, கொட்டாரம், சாமிதோப்பு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மதியம் 1.30 மணிக்கு பிறகு பலத்த மழை பெய்தது.
மேற்கு மாவட்ட பகுதிகளில் தக்கலை, மார்த்தாண்டம், புலியூர்குறிச்சி, பத்மநாபபுரம், குலசேகரம், திற்பரப்பு, திருவட்டார், ஆற்றூர், சிதறால், மாத்தார், வேர்க்கிளம்பி உள்ளிட்ட பகுதிகளிலும், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் மலையோர பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலையில் வாகனம் ஓட்ட முடியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மதியம் 3 மணி வரை வானில் கருமேகங்கள் திரண்டு லேசான தூரல் விழுந்து கொண்டு இருந்தது.
பேச்சிப்பாைறயில் 57.8 மில்லி மீட்டர் பதிவு
குமரி மாவட்டம் முழுவதும் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பேச்சிப்பாறை அணை பகுதியில் 57.8 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. இதே போல் பூதப்பாண்டி-13, சிற்றார் 1-12.4, கன்னிமார்-4.2, கொட்டாரம்-2.2, மயிலாடி-18.2, நாகர்கோவில்-1.6, சிற்றார் 2-18.2, சுருளகோடு-9.2, பாலமோர்-23.2, ஆரல்வாய்மொழி-1.8, முக்கடல்-3.2 என்ற அளவில் மழை பெய்திருந்தது.
மழை காரணமாக அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 42.27 அடியாக உள்ளது. அணைக்கு நேற்று காலையில் வினாடிக்கு 1483 கனஅடி தண்ணீர் வந்தது. இதே போல் பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 71.70 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 842 கனஅடி தண்ணீர் வருகிறது.
உபரிநீர் வெளியேற்றம்
அணைகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பதால் பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 1,066 கனஅடி உபரிநீரும், பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு 1364 கனஅடி உபரிநீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் குழித்துறை தாமிரபரணி ஆற்றிலும், கோதையாற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் திற்பரப்பு அருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பழையாற்றில் சபரி மற்றும் சோழன்திட்டை தடுப்பு அணைகளில் தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. திருவட்டாறு அருகே உள்ள அருவிக்கரை பகுதியில் பறளியாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மழை காரணமாக ரப்பர் பால் வடிப்பு, செங்கல் சூளை தொழில்கள் பாதிக்கப்பட்டன.
தென்தாமரைக்குளம், அகஸ்தீஸ்வரம், பூவியூர், சாமிதோப்பு போன்ற பகுதிகளில் கனமழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சாமிதோப்பில் உள்ள உப்பளத்தில் மழைநீர் தேங்கி நின்றது.
கோபுர கலசம் உடைந்தது
கன்னியாகுமரி பகுதியில் நேற்று பிற்பகல் 2.15 மணியளவில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது கன்னியாகுமரி அருகேயுள்ள பெருமாள்புரம் வெட்டிமுறிச்சான் இசக்கியம்மன் கோவிலில் ராஜகோபுரத்தின் மீது மின்னல் தாக்கியது. இதில் கோபுரத்தில் இருந்த 5 கலசங்களில் ஒரு கலசம் உடைந்து கீழே விழுந்தது.
மின்னல் தாக்கிய போது கோவிலில் அன்னதானம் நடந்து கொண்டிருந்தது. கோவிலுக்குள்ளும், வௌிப்பகுதியிலும் நின்று கொண்டிருந்த 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.
இந்தநிலையில் மின்னல் தாக்கிய கோவில் கோபுரத்தை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், முன்னாள் எம்.எல்.ஏ.ஆஸ்டின், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு, தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தாமரைபாரதி, பார்த்தசாரதி ஆகியோர் பார்வையிட்டனர்.
வீடுகள் இடிந்தன
மழை காரணமாக அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 3 வீடுகள் இடிந்து சேதமடைந்தன. இதில் ஒரு வீடு முழுமையாக இடிந்து விழுந்தது. 2 வீடுகள் பாதியளவு இடிந்தன. இதே தோவாளை தாலுகாவில் ஒரு வீடு பாதியளவு இடிந்தது.
இந்த நிலையில் தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வருகிற 7-ந் தேதி வரை குமரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.