நத்தம் அருகே கவராயபட்டியில் முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமாக காளை ஒன்று இருந்தது. இந்த காளை வயது முதிர்வு காரணமாக நேற்று காலை திடீரென்று இறந்தது. இதைத்தொடர்ந்து இறந்த கோவில் காளையின் உடலை கிராம மந்தையில் வைத்தனர். அங்கு காளையின் உடலுக்கு மாலை அணிவித்து, சந்தனம் பூசப்பட்டது. பின்னர் வேட்டி, துண்டுகளை அணிவித்தனர். மாடுபிடி வீரர்கள், இளைஞர்கள், கிராம மக்கள் மற்றும் சுற்றுவட்டாரங்களை சேர்ந்தவர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பின்பு காளையின் உடலை மேளதாளம் முழங்க, வாணவேடிக்கையுடன் கோவிலுக்கு அருகே உள்ள இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த கோவில் காளை அலங்காநல்லூர், பாலமேடு, நத்தம், அவனியாபுரம் கொசவபட்டி, தவசிமடை, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நடைபெற்ற ஜல்லிகட்டுகளில் பங்கேற்று தங்கம், வெள்ளி காசுகளையும், சில்வர், பித்தளை பாத்திரங்கள், சைக்கிள் போன்ற பல்வேறு பரிசு பொருட்களை பெற்று பெருமை சேர்த்துள்ளது. இந்த கோவில் காளை இறந்ததால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.