வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை

விக்கிரமசிங்கபுரம் அருகே சொத்து பிரச்சினையில் வாலிபர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேரை கைது செய்த போலீசார், தலைமறைவான 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-04-22 21:58 GMT

சிவராமன்

விக்கிரமசிங்கபுரம்:

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே கோடாரங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கபாண்டியன். இவருடைய மகன் செல்வா என்ற சிவராமன் (வயது 25). இவர் பி.ஏ. படித்து விட்டு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

சொத்து பிரச்சினை

இவருடைய குடும்பத்தினருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான சுடலைமுத்து குடும்பத்தினருக்கும் இடையே சொத்து பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் சிவராமன் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு, மாலையில் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது சுடலைமுத்து மகன் உலகநாதன் என்ற சங்கர் செல்போனில் சிவராமனை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர், சொத்து பிரச்சினை தொடர்பாக பேச வேண்டும், எனவே ஆலடியூர் செல்லும் வழியில் உள்ள கல்குவாரி அருகில் வருமாறு சிவராமனை அழைத்தார்.

வெட்டிக்கொலை

இதனை உண்மை என்று நம்பிய சிவராமன் மோட்டார் சைக்கிளில் அங்கு சென்றார். அப்போது கல்குவாரி அருகில் சாலையோரம் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 5 பேர் கொண்ட கும்பல் திடீரென்று சிவராமனை சுற்றி வளைத்து அவரை சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியவாறு கிடந்தார்.

அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, விக்கிரமசிங்கபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, படுகாயமடைந்த சிவராமனை மீட்டு சிகிச்சைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் சிவராமன் பரிதாபமாக இறந்தார்.

3 பேர் கைது

இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த கொலை தொடர்பாக பிரம்மதேசத்தைச் சேர்ந்த முருகன், அம்பையைச் சேர்ந்த வெங்கடேஷ், மருதப்புரத்தைச் சேர்ந்த ராசு ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான சங்கர், ராஜா ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

விக்கிரமசிங்கபுரம் அருகே சொத்து பிரச்சினையில் வாலிபர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்