மின்மாற்றியில் தாமிர கம்பியை திருட முயன்ற வாலிபர்

விராலிமலை அருகே மின்மாற்றியின் தாமிர கம்பியை திருடமுயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Update: 2022-07-27 18:45 GMT

விராலிமலை:

தாமிர கம்பியை திருடுவதற்காக

விராலிமலை அருகே அத்திப்பள்ளம் கிராமத்தில் புதிய அரிசி ஆலைக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக மின்மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. தற்போது அப்பணியானது நிறைவடைந்து நேற்று மின்வினியோகம் வழங்கப்பட இருந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மர்மநபர் ஒருவர் மின்மாற்றியின் மேலே ஏறி தாமிர கம்பியை திருடுவதற்காக நின்று கொண்டிருப்பதைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் இதுகுறித்து மற்ற சிலருக்கு செல்போன் மூலம் தகவல் அளித்துள்ளார்.

வாலிபர் போலீசில் ஒப்படைப்பு

அதனைதொடர்ந்து பொதுமக்கள் அங்கு திரண்டு அந்த மர்ம நபரை பிடிக்க முயன்ற போது அந்த நபர் மின்மாற்றி மேலே இருந்து கீழே குதித்து தப்பி ஓட முயன்றார். ஆனால் பொதுமக்கள் விரட்டி சென்று அவரை மடக்கி பிடித்து மரத்தில் கட்டி வைத்தனர்.

பின்னர் அவரிடம் விசாரித்ததில் அந்த நபர் புதுக்கோட்டை மாவட்டம், ஒலியமங்கலத்தை சேர்ந்த சின்னையா மகன் ராஜா (வயது 34) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த வாலிபரை பொதுமக்கள் விராலிமலை போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து விராலிமலை மின்வாரிய அலுவலகத்தில் கம்பியாளராக பணிபுரியும் பார்த்திபன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்