பள்ளிக்கு அடிப்படை வசதி கேட்டு கண்ணீர்விட்ட ஆசிரியை கோரிக்கைகளை நிறைவேற்ற பா.ஜ.க. வலியுறுத்தல்
பள்ளியின் ஆசிரியை ஒருவர் கண்ணீர் விட்டு அழுதுகொண்டே பள்ளியின் சீர்கேடான நிலை குறித்து பேசி உள்ளது,
சென்னை,
தமிழக பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டம் சாலமரத்துப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அந்த ஊர் பள்ளியின் ஆசிரியை ஒருவர் கண்ணீர் விட்டு அழுதுகொண்டே பள்ளியின் சீர்கேடான நிலை குறித்து பேசி உள்ளது,தமிழக கல்வித்துறையின் அவல நிலையை வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது. அந்த பள்ளிக்கு மின் இணைப்பு கொடுக்க மறுத்து அந்த ஆசிரியையை அவமானப்படுத்திய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
உடனடியாக அந்த பள்ளி கட்டிடத்திற்கு மின் இணைப்பு கொடுக்கப்பட வேண்டும். ஆசிரியையின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அவரை அழைத்து பேச வேண்டும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து அரசு அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.