பாவூர்சத்திரம் அருகே ஆசிரியர் தம்பதியை கட்டிப்போட்டு 140 பவுன் நகை-ரூ.10 லட்சம் கொள்ளை-முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்
பாவூர்சத்திரம் அருகே ஓய்வுபெற்ற ஆசிரியர் தம்பதியை கட்டிப்போட்டு 140 பவுன் நகை, ரூ.10 லட்சத்தை முகமூடி அணிந்து வந்த மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே ஓய்வுபெற்ற ஆசிரியர் தம்பதியை கட்டிப்போட்டு 140 பவுன் நகை, ரூ.10 லட்சத்தை முகமூடி அணிந்து வந்த மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
இந்த துணிகர கொள்ளை சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
ஆசிரியர் தம்பதி
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் சிதம்பர நாடார் தெருவை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 88). இவருடைய மனைவி ஜாய் சொர்ணதேவி (83). இவர்கள் ஓய்வுபெற்ற ஆசிரியர் தம்பதி ஆவர்.
இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. மகள் ராணி பெற்றோருடன் வசித்து வருகிறார். அவர் வள்ளியூரில் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் என்ஜினீயராக உள்ளார். மற்ற 2 பேரும் குடும்பத்துடன் வெளியூரில் வசிக்கின்றனர்.
முகமூடி கொள்ளையர்கள்
நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் வயதான தம்பதியர் இருவரும் வீட்டில் தனியாக இருந்தனர். ஜாய் சொர்ணதேவி வீட்டின் வராண்டாவில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் பின்பக்கத்தில் உள்ள காட்டுப்பகுதி வழியாக வந்த முகமூடி அணிந்த மர்மநபர்கள் 3 பேர், காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்தனர்.
அவர்கள் வராண்டாவில் இருந்த பல்புகளை உடைத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜாய் சொர்ணதேவி கூச்சலிட முயன்றார். அப்போது மர்மநபர்கள் அவரது வாயில் துணியை திணித்து, கைகளை கட்டி வீட்டுக்குள் இழுத்து சென்றனர். வீட்டின் உள்ளே அருணாச்சலம் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தனர். அவர் தனது மனைவியை முகமூடி கொள்ளையர்கள் இழுத்தை வருவதை பார்த்ததும் கூச்சலிட்டார். அதற்குள் அந்த நபர்கள் அவரின் வாயையும் துணியால் பொத்தி கைகளை கட்டினர். பின்னர் தம்பதியரின் கால்களை கட்டி அவர்களை ஒரு அறைக்குள் தள்ளி பூட்டினர்.
140 பவுன்-ரூ.10 லட்சம் கொள்ளை
அதன்பிறகு கொள்ளையர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 140 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.10 லட்சத்தை அள்ளிக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இந்த நிலையில் வேலைக்கு சென்றிருந்த ராணி, நேற்று அலுவலகத்தில் ஒரு நிகழ்ச்சி என்பதால் அதை முடித்துக் கொண்டு இரவு தாமதமாக வீட்டுக்கு வந்தார்.
மகள் அதிர்ச்சி
அவர் வீட்டில் தனது பெற்றோர் கை, கால்கள் கட்டப்பட்டு கிடந்ததையும், பீரோவில் இருந்த நகை, பணம் கொள்ளை போனதையும் அறிந்து அதிர்ச்சியில் உறைந்து போனார். பின்னர் பெற்றோரின் கை, கால் கட்டுகளை அவிழ்த்து அவர்களை விடுவித்துவிட்டு, இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது அங்கு மோப்பம் பிடித்து விட்டு சுமார் 100 அடி தூரம் ஓடி நின்று விட்டது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
கண்காணிப்பு கேமரா ஆய்வு
கொள்ளை நடந்த வீட்டில் கண்காணிப்பு கேமரா இல்லை. இதனால் அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை மற்றும் ஆவுடையானூர்-பாவூர்சத்திரம் ரோட்டில் உள்ள ஒரு கல்லறை பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
கொள்ளை கும்பல் கை, கால்களை கட்டி இழுத்து சென்றதில் காயம் அடைந்த வயதான தம்பதியர் இருவரும் அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முகமூடி கொள்ளை கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.
பரபரப்பு
வீட்டில் தனியாக இருந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் தம்பதியை கட்டிப்போட்டு நகை, பணத்தை அள்ளிச்சென்ற முகமூடி கொள்ளையர்களின் அட்டகாசத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.