பாடப்புத்தகம் அச்சடிக்கும் பணி பாதிக்கும் நிலை

பாடப்புத்தகம் அச்சடிக்கும் பணி பாதிக்கும் நிலை உள்ளதாக அச்சக உரிமையாளர்கள் கூறினர்.

Update: 2023-03-10 20:13 GMT

சிவகாசி, 

சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் 800-க்கும் அதிகமான அச்சகங்கள் இயங்கி வருகிறது. இங்கு சுமார் 60-க்கும் மேற்பட்ட அச்சகங்களில் பாடப்புத்தகங்களும், 200-க்கும் மேற்பட்ட அச்சகங்களில் நோட்டு புத்தங்கள், வரைப்படங்கள். கிராப் பேப்பர்கள் அச்சிடப்பட்டு தென் இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கப்படுகிறது.

மின்வெட்டு

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு தேவையான பாடப்புத்தகங்கள் சிவகாசி பகுதியில் தான் தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக முன்அறிவிப்பு இல்லாத மின்வெட்டு சில நேரங்களில் ஏற்படுவதாக அச்சக உரிமையாளர்கள் தெரிவிக்கிறார்கள். கோடைக்காலம் தொடங்கும் முன்பே இந்த மின் வெட்டு இருப்பதால் இன்னும் 2 மாதங்கள் இந்த நிலைமை இருக்கும் என்ற அச்சம் அச்சக உரிமையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மின்வெட்டு தொடர்ச்சியாக ஏற்பட்டால் சிவகாசி பகுதியில் நோட்டுகள் மற்றும் புத்தகங்கள் அச்சடிக்கும் பணி பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

ஆர்டர்கள்

இதுகுறித்து அச்சக அதிபர் விஜய்நாத் கூறியதாவது:- ஒவ்வொரு ஆண்டும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் தான் எங்களுக்கு முழு வேலை கிடைக்கும். இது போன்ற நேரங்களில் திடீர் மின்வெட்டு ஏற்பட்டால் குறித்த நேரத்தில் நாங்கள் பெற்ற ஆர்டர்களுக்கு தேவையான புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்படும்.

தற்போது உள்ள மின் வெட்டு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றாலும், இன்னும் 2 மாதங்களில் அதிகளவில் வீடுகளில் மின் தேவை இருக்கும் போது அதை சரி செய்ய மின்வாரியம் கட்டாய மின்நிறுத்தம் செய்ய வாய்ப்பு ஏற்படும். அதுபோன்ற நேரத்தில் அச்சகங்கள் பாதிப்பு இல்லாத வகையில் முன்எச்சரிக்கை நடவடிக்கையை மின்வாரியம் எடுக்க வேண்டும்.

கூடுதல் சம்பளம்

அச்சக தொழிலாளி ஷேக்அப்துல்லா:- சிறிய அச்சகங்கள் பல நசிந்து வரும் நிலையில் நாங்கள் தினக்கூலிகளாக பணியாற்றி வரும் அச்சகங்களில் நிலை தற்போது பரிதாபமாக இருக்கிறது. மார்ச் முதல் மே மாதம் வரை தான் எங்களுக்கு சீசன். இந்த நேரத்தில் தான் எங்களுக்கு கூடுதல் நேரம் வேலை செய்யும் வாய்ப்பு ஏற்படும். சம்பளமும் கூடுதலாக கிடைக்கும்.

இதனை கொண்டு தான் குடும்பத்தை நடத்த வேண்டும். இப்படி ஒரு நிலை இருக்கும் போது மின்தட்டுப்பாடு இல்லாமல் இருக்க தேவையான நடவடிக்கையை மின்வாரியம் எடுக்க வேண்டும். நகரப்பகுதியில் 30 நிமிடங்கள் வரை மின்வெட்டு ஏற்படுகிறது. சில நாட்கள் இந்த மின்வெட்டு அதிக முறை ஏற்படுகிறது. அனைத்து பகுதியிலும் மின் வெட்டு இல்லை. அதனால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. இருந்தாலும் அடுத்து வரும் 2 மாதங்கள் மின்வெட்டு இல்லாமல் இருந்தால் நல்லது.

அச்சம்

பைண்டிங் தொழிலாளி பாண்டி:- தென் மாநிலங்களில் உள்ள பல பகுதிகளுக்கு சிவகாசியில் இருந்து தான் நோட்டு, புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் என்னை போன்ற பைண்டிங் தொழிலாளர்களுக்கு கூடுதல் நேரம் வேலை கிடைக்கும். ஒவ்வொரு மணிக்கு இவ்வளவு என கணக்கிட்டு சம்பளம் தந்து விடுகிறார்கள்.

இதனால் நாங்கள் எங்கள் கடன்களை அடைக்கும் வாய்ப்பு கிடைக்கும். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக திடீரென ஏற்படும் மின்வெட்டினை நினைத்தால் அச்சமாக இருக்கிறது. இது தொடர கூடாது. இதை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது உள்ள மின்வெட்டால் பெரும் பாதிப்பு இல்லை என்றாலும் இது தொடரக்கூடாது என்பது தான் கோரிக்கை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்