ஓராண்டுக்குள் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு
மாவட்டத்தில் ஓராண்டுக்குள் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சாந்தி கூறினார்.
நல்லம்பள்ளி:-
மாவட்டத்தில் ஓராண்டுக்குள் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சாந்தி கூறினார்.
மரக்கன்றுகள் நடும் விழா
"எனக்கென்று ஒரு மரக்கன்று" "மனிதர்களை மட்டும் அல்ல மரங்களையும் நேசிப்போம்" என்ற கருத்தை மையமாக கொண்டு தர்மபுரி மாவட்டம் முழுவதும் இந்த ஆண்டு ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இைதொடர்ந்து மரக்கன்றுகள் வளர்ப்பதை ஊக்குவிக்கும் விதமாக நீர்வளத்துறையின் சார்பில் நல்லம்பள்ளி அருகே அதியமான்கோட்டையில் உள்ள சோழவராயன் ஏரியில் மாபெரும் மரக்கன்றுகள் நடும் பணி நேற்று நடந்தது.
500 மரக்கன்றுகள்
இந்த நிகழ்ச்சிக்கு தர்மபுரி மாவட்ட கலெக்டர் கி.சாந்தி தலைமை தாங்கி மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்து, அவர் மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதில் பனை விதைகள், வேப்ப மரக்கன்றுகள், புங்கன், நாவல், இலுப்பை உள்ளிட்ட வகையை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.
இந்த பணிகளை பார்வையிட்ட கலெக்டர் சாந்தி பேசும் போது, ஏரியில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகளை முள்வேலி அமைத்து பாதுகாக்க வேண்டும். தினமும் தண்ணீர் ஊற்றி வளர்த்து விட்டால், பின்வரும்நாளில் இந்த மரங்கள் தானாக வளர்ந்து பசுமையாக காட்சி அளிக்கும். தர்மபுரி மாவட்டம் முழுவதும் ஓராண்டுக்குள் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
அதிகாரிகள்
இதில் மாவட்ட வன அலுவலர் அப்பல்லநாயுடு, ஜல்சக்தி அபியான் அமைச்சக புது டெல்லி நிதி ஆயோக் இயக்குநர் சுப்ரதாபிரகாஷ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், நீர்வளத்துறை செயற்பொறியாளர் குமார், உதவி பொறியாளர் மோகனப்பிரியா, தாசில்தார் பெருமாள், வட்டார வளர்ச்சி அலுவலர் ஷகிலா, ஒன்றியக்குழுத் தலைவர் மகேஸ்வரி, ஊராட்சி மன்றத்தலைவர் மாரியம்மாள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.