நீலகிரியில் கோடை விழா இன்றுடன் நிறைவடைகிறது
நீலகிரியில் கோடை விழா இன்றுடன் நிறைவடைகிறது.;
நீலகிரி,
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுகிறது. இந்த சீசனில் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக கோடை விழா நடத்தப்படுகிறது. கடந்த 7-ந் தேதி கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா தொடங்கியது. தொடர்ந்து கண்காட்சிகள், கலைநிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 62-வது பழக்கண்காட்சி நேற்று தொடங்கியது. கண்காட்சியை குன்னூர் நகராட்சி தலைவர் ஷீலா கேத்தரின் தொடங்கி வைத்தார். பூங்கா நுழைவுவாயில் பழங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பிற மாவட்டங்களில் விளையும் பழங்களை கொண்டு அரங்குகள் அமைக்கப்பட்டது. குறிப்பாக 1 டன் திராட்சை பழங்களை கொண்டு 12 அடி நீளம், 9 அடி உயரத்தில் கழுகு உருவம் உருவாக்கப்பட்டு இருந்தது. இது சுற்றுலா பயணிகளை கவர்ந்தது.
பழங்களால் ஆன பல்வேறு உருவங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். மேலும் புகைப்படம், செல்பி எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர். சுற்றுலா பயணிகள் தோட்டக்கலைத்துறை மூலம் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
இந்த நிலையில், நீலகிரியில் கோலாகலமாக நடைபெற்று வந்த கோடை விழா இன்றுடன் நிறைவடைகிறது. இறுதியாக பழக்கண்காட்சியுடன் கோடை விழா நிறைவு பெறுகிறது. கோடை விழா இன்றுடன் முடிவடைவதால் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.