புகாரில் சிக்கிய சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசார் இடமாற்றம்

முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவருடன் தொடர்பில் இருந்ததாக, புகாரில் சிக்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டனர்

Update: 2023-06-08 18:45 GMT

முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவருடன் தொடர்பில் இருந்ததாக, புகாரில் சிக்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

கிராம நிர்வாக அதிகாரி கொலை வழக்கு

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டில் உள்ள கோவில்பத்து கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தவர் லூர்து பிரான்சிஸ் சேவியர் (வயது 54). இவர் மணல் கடத்தலை தடுத்ததாக கூறி, கடந்த ஏப்ரல் மாதம் 25-ந்தேதி கிராம நிர்வாக அலுவலகத்தில் பணியில் இருந்தபோது, வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக கலியாவூரைச் சேர்ந்த ராமசுப்பு, மாரிமுத்து ஆகிய 2 பேரை கைது செய்தனர். கைதான 2 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்ததை தொடர்ந்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

போலீசாருக்கு தொடர்பு

இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவருடன் சில போலீசார் தொடர்பில் இருந்ததாகவும், அவர்கள் மணல் கொள்ளையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பல்வேறு தரப்பினர் புகார் தெரிவித்தனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து தூத்துக்குடி ஊரக துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு, தீவிர விசாரணை நடத்தி வந்தார். தொடர்ந்து ராமசுப்பின் செல்போன் எண்ணுக்கு வந்த அழைப்புகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.

3 போலீசார் இடமாற்றம்

இந்த நிலையில் முறப்பநாடு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி, தற்போது சாயர்புரத்தில் பணியாற்றி வரும் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், ஏட்டு சரவணன், தனிப்பிரிவு போலீஸ்காரர் மகாலிங்கம் ஆகிய 3 பேரும் நிர்வாக காரணங்களுக்காக நீலகிரி மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு பிறப்பித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்