கொங்கன சித்தர் குகைக்கோவிலில் சாமிசிலை சேதம்

காங்கயம் அருகே ஊதியூர் மலையில் 800 ஆண்டுகள் பழமையான கொங்கன சித்தர் குகைக்கோவிலில் இருந்த சாமிசிலையை மர்ம ஆசாமிகள் சேதப்படுத்தி உள்ளனர்.

Update: 2023-10-03 17:10 GMT

திருப்பூர்,

காங்கயம் அருகே ஊதியூர் மலையில் 800 ஆண்டுகள் பழமையான கொங்கன சித்தர் குகைக்கோவிலில் இருந்த சாமிசிலையை மர்ம ஆசாமிகள் சேதப்படுத்தி உள்ளனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

குகைக்கோவில்

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே ஊதியூரில் மலைக்குன்று உள்ளது. இந்த மலையில் அறிய வகை மூலிகைகள் காணப்படுகிறது. மேலும் அங்கு வாழும் விலங்குகளுக்கும் அந்த மலை அடைக்கலமாக விளங்குகிறது. இந்த மலைக்குன்றின் உச்சியில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த கொங்கனசித்தர் குகைக்கோவில் அமைந்துள்ளது. இங்கு வாழ்ந்து வந்த கொங்கன சித்தரை வழிபடும் விதமாக இக்கோவில் எழுப்பப்பட்டுள்ளது.

இந்த கோவிலில் 2 அடி உயரம் உள்ள சிவலிங்கம் உள்ளது.

இ்ந்த கோவிலில் தினமும் காலை மற்றும் மதியம் பூஜை நடக்கிறது. மேலும் பவுர்ணமி, அமாவாசை நாட்களில் இரவில் விஷேச பூஜை நடக்கும். இந்த பூஜையில் கலந்து கொள்ள ஏராளமான பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருவார்கள்.

சிலை சேதம்

ஆனால் குகைக்கோவிலில் உள்ள சிவலிங்கத்தை வழிபட பாறைக்கு வெளியில் இருந்து குகை வழியாக நெளிந்து செல்ல வேண்டும். ஒவ்வொருவராகத்தான் செல்ல முடியும். உடல் பருமனாக இருப்பவர்கள் அந்த சிறிய வழியாக செல்ல முடியாது. ஆனால் சிவலிங்கம் இருக்கும் பகுதியில் 15 பேர் வரை நின்று வழிபட இடம் உள்ளது. அங்கு சிவலிங்கத்தை தரிசனம் செய்து விட்டு மற்றொரு சிறிய வழியாக வெளியே வரவேண்டும். இந்த கோவிலில் பூசாரியாக காங்கயத்தை சேர்ந்த ஒருவர் இருந்து வருகிறார். இவர்தான் தினமும் அந்த மலைக்கு சென்று சிவலிங்கத்திற்கு பூஜை செய்து வந்தார். ஆனால் கடந்த மார்ச் மாதம் முதல் ஊதியூர் மலையில் சிறுத்தை பதுங்கி உள்ளதால் பக்தர்கள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் பவுர்ணமி, அமாவாசை தினங்களில் மட்டும் வனத்துறையினர் பாதுகாப்புடன் பூசாரி அங்கு சென்று பூஜை செய்து வந்தார். மற்ற நாட்களில் பூஜை நடைபெறவில்லை.

இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி வனத்துறையினரின் பாதுகாப்புடன் பூசாரி அங்கு பூஜை செய்ய சென்றார். அப்போது குகை முன்பு இருந்த கிணற்றின் வெளியில் வைக்கப்பட்டிருந்த இரும்பு ராடு மற்றும் தண்ணீர் தொட்டி சேதப்படுத்தப்பட்டிருந்தது. கற்களால் கட்டப்பட்ட சுவர் இடிக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பூசாரி கோவிலுக்குள் சென்று பார்த்தார். அப்போது அங்கு சாமி சிலை சேதப்படுத்தப்பட்டிருந்தது. மர்ம ஆசாமிகள் சிவலிங்கத்தை சேதப்படுத்தி உடைத்து போட்டிருந்தனர்.

போலீசில் புகார்

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பக்தர்களுக்கும், முக்கிய நிர்வாகிகளுக்கும் தெரிவித்தார். இதையடுத்து இந்து முன்னணியினர் காங்கயம் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்