தஞ்சாவூரில் உள்ள உயர்மட்ட பாலத்தின் பக்கவாட்டு சுவர் திடீரென சரிந்து விழுந்ததால் பரபரப்பு..!

தஞ்சாவூரில் உள்ள உயர்மட்ட பாலத்தின் பக்கவாட்டு சுவர் திடீரென சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-06-20 08:02 GMT

தஞ்சை,

தஞ்சை அருகே உள்ள செங்கிப்பட்டியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக தஞ்சை-திருச்சி மார்க்கத்தில் செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் சென்று வந்தன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த பாலத்தை கடந்து செல்வதால் மாவட்டத்தில் போக்குவரத்து அதிகம் உள்ள பாலங்களில் இது முதன்மையானதாக விளங்கியது.

இந்நிலையில் இன்று அதிகாலை இந்த உயர்மட்ட பாலத்தின் பக்கவாட்டு சுவர் திடீரென சரிந்து விழ தொடங்கியது. சிறிது நேரத்தில் மளமளவென பாலத்தின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. அப்போது வாகனங்கள் எதுவும் செல்லாததால் பெரும் விபத்து, உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், விவசாய சங்கத்தினர், பொதுமக்கள் அங்கு திரண்டனர். பின்னர் சம்பவம் நடந்த இடத்தில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் தான் பாலம் சரிந்து விழுந்தது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். அவர்களிடம் செங்கிப்பட்டி போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கட்சியினர் கலைந்து சென்றனர். மறியலால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் பாலம் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததால் திருச்சி, கந்தர்வக்கோட்டை செல்லும் வாகனங்கள் அனைத்தும் செங்கிப்பட்டி பிரிவு சாலை வழியாக திருப்பி விடப்பட்டன. முன்னதாக சம்பவ இடத்தை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்