சிவசேனா கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்
பழனிசெட்டிபட்டியில் தனியார் மதுபான பார் முன்பு சிவசேனா கட்சியினர் முழங்காலிட்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் நெடுஞ்சாலையோரம் தனியார் மதுபான பார் அமைந்துள்ளது. நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மதுபான பாரால் விபத்துகள் ஏற்படுவதாகவும், இந்த மதுபான பாரை மூடக்கோரியும் சிவசேனா கட்சி சார்பில் அந்த பாரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனால், அங்கு நேற்று போலீசார் குவிக்கப்பட்டனர். சிவசேனா கட்சி மாநில செயலாளர் குருஅய்யப்பன் தலைமையில் நிர்வாகிகள் அங்கு வந்தனர். அவர்கள் மதுபான பாரை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் அந்த பார் முன்பு தரையில் முழங்காலிட்டு மதுபான பாரை மூடக்கோரி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் 1 வார காலத்தில் மதுபான பாரை மூடாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்று கூறி அவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.