காவலாளியை கத்தியால் குத்தி பணம் பறிப்பு
காவலாளியை மிரட்டி கத்தியால் குத்தி ரூ.700-ஐ பறித்து விட்டு மர்மநபர்கள் தப்பிச் சென்றனர்.
சூலூர்
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ரோஸ்மிக்காந்த் (வயது 34). இவர் சூலூர் அருகே தென்னம்பாளையத்தில் அறை எடுத்து தங்கி தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் தென்னம்பாளையம் பிரிவில் நின்று கொண்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் லிப்ட் கேட்டார். அவரும் ரோஸ்மிக்காந்தை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்று ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நிறுத்தினார்.
அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 ஆசாமி கள் திடீரென்று ரோஸ்மிக்காந்தை மிரட்டி கத்தியால் குத்தி ரூ.700-ஐ பறித்து விட்டு தப்பிச் சென்றனர். இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.