பள்ளி வகுப்பறை கட்டிட பணிகளை அடுத்த மாதத்திற்குள் முடிக்க வேண்டும்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்றுவரும் பள்ளி வகுப்பறை கட்டிட பணிகளை அடுத்த மாதத்திற்குள் (மே) முடிக்க வேண்டும் என கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-04-20 16:23 GMT

ஆய்வு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலுவலர்களுக்கான மாதாந்திரா ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் மாவட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராம பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைகளின் சார்பாக நடைபெறும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளின் தற்போதைய நிலவரம், நிலுவைகள், முடிக்கப்பட்ட பணிகள் மற்றும் நிதி ஆதாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் கலெக்டர் வளர்மதி பேசியதாவது:-

சமையல் கூடங்கள்

தமிழ்நாடு முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் அனைத்து ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தொடங்கப்பட உள்ளதையொட்டி அங்குள்ள சமையல் கூடங்களை சரி பார்க்கும் பணிகளையும், புதிய கட்டிடம் கட்டும் பணிகளையும் விரைவாக முடிக்க வேண்டும். அடுத்த மாதம் (மே) 20-ந் தேதிக்குள் இப்பணிகளை முடித்து தயார் நிலையில் வைக்க வேண்டும். மேலும் 7 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 84 பள்ளிகளில் 176 புதிய வகுப்பறை கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் அனைத்தும் வருகிற அடுத்த மாத்திற்குள் முடித்தாக வேண்டும்.

அடுத்த கல்வியாண்டில் பள்ளி மாணவ- மாணவிகள் பயன்படுத்தும் விதமாக பணிகள் முடிக்கப்பட வேண்டும். சோளிங்கர், திமிரி, ஆற்காடு ஆகிய ஒன்றியங்களில் பணிகள் சில இடங்களில் காலதாமதமாக நடைபெறுகின்றது. ஆகவே அவற்றை கண்காணிக்க வேண்டும். அதேபோன்று பள்ளி விடுமுறை நாட்கள் என்பதால் 2018-19 ஆம் நிதி ஆண்டிற்கான பள்ளி சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் அனைத்து வட்டாரங்களிலும் நிலுவையில் இருந்து வருகிறது. இப்பணிகளை இந்த விடுமுறை நாட்களுக்குள் கட்டாயம் முடிக்க வேண்டும்.

100 நாள் வேலை

அனைத்து கிராமப்புறங்களில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் 63 ஆயிரம் நபர்களுக்கு 100 நாள் வேலை பணிகள் இதுவரையில் வழங்கப்படவில்லை என கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுக்கு கட்டாயம் 100 நாள் வேலை வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மே 1-ந் தேதி நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அவர்களுக்கு வேலைப்பணிக்கான அட்டைகள் வழங்கப்பட வேண்டும். 6 ஊராட்சி ஒன்றியங்களில் 23 ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டு இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை. இதனை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் 2021-2022-ம் நிதி ஆண்டில் வழங்கப்பட்ட பணிகளில் சிமெண்டு சாலை, கழிவுநீர் கால்வாய் அமைத்தல், அங்கன்வாடி கட்டிடம் கட்டுதல், பள்ளி கழிப்பறை கட்டுதல், குளம் குட்டைகள் சீரமைக்கும் பணிகள் மற்றும் இதர கட்டிடப் பணிகள் மேற்கொண்டு வருவதை இந்த மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும்.

குடிநீர் பிரச்சினை

கோடை காலம் தொடங்கி வெப்பம் அதிகரித்து வரும் சூழ்நிலையில் கிராமப் பகுதிகளில் குடிநீர் பிரச்சினைகள் ஏற்படுகின்றதா என்பதை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். பொது மக்களுக்கு சீரான குடிநீர் வழங்கிட குடிநீர் பைப்புககளை பழுது பார்த்தல் மற்றும் ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான இடங்களை முன்கூட்டியே கண்டறிந்து வைக்க வேண்டும். பிரச்சினைகள் ஏற்படும் என தெரியவரும் கிராமங்களில் முன்கூட்டியே பிரச்சினைகளுக்கான தீர்வுகாண இந்த நடவடிக்கைகளை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, செயற்பொறியாளர் முத்துக்குமார், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) குமார் மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர்கள், ஒன்றியப் பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்