கறம்பக்குடி சந்தையில் நாட்டுக்கோழி விற்பனை அமோகம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கறம்பக்குடி சந்தையில் நாட்டுக்கோழிகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. விலையும் கிடு கிடுவென உயர்ந்துள்ளது.

Update: 2022-10-19 18:22 GMT

கறம்பக்குடி:

சந்தையில் நாட்டுக்கோழி விற்பனை

கறம்பக்குடியில் புதன்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இங்கு நடைபெறும் கோழி சந்தை பிரபலம் என்பதால் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் நாட்டு கோழிகளை வாங்க, விற்க கறம்பக்குடி சந்தைக்கு வந்து செல்கின்றனர். புரட்டாசி மாதம் நிறைவடைந்து தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் நேற்று கறம்பக்குடியில் கோழி சந்தை களைகட்டியது.

கடந்த ஒரு மாதமாக கோழிகள் விற்பனை மந்தமாக இருந்தது. சந்தைக்கு வியாபாரிகள் வருகையும் குறைவாக இருந்தது. இதனால் விலை கடும் வீழ்ச்சி அடைந்தது. கோழிகளை விற்க வந்த பொதுமக்கள் பலர் உரிய விலை கிடைக்காததால் திரும்பி சென்றனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற சந்தையில் கோழிகள் வரத்து அதிகமாக இருந்தது. வெளியூர் வியாபாரிகளும் அதிக அளவில் சந்தைக்கு வந்திருந்தனர்.

கோழி ரூ.400 முதல் ரூ.450-க்கு விற்பனை

இதனால் கோழிகளின் விலை கிடு கிடுவென உயர்ந்தது. கடந்த வாரம் ஒரு கிலோ எடை கொண்ட சேவல் ரூ.250-க்கும், பெட்டைக் கோழி ரூ.300-க்கும் விற்கப்பட்டது. ஆனால் நேற்றைய சந்தையில் சேவல் ரூ.350-க்கும் பெட்டைக்கோழி ரூ.400 முதல் ரூ.450 வரையும் விற்பனை ஆனது. விலை உயர்ந்ததால் கோழிகளை விற்க வந்த விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து கோழிகளை விற்க வந்த பெண் ஒருவர் கூறுகையில், விவசாயம் கை கொடுக்காத நிலையில், சரியான வேலைவாய்ப்பும் கிடைக்காத போதும் ஆடு, கோழி வளர்ப்பே கிராம பகுதி மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. தீபாவளியை முன்னிட்டு பெட்டைக் கோழிகளுக்கு நல்ல விலை கிடைத்தது. இருப்பினும் இடைத்தரகர்கள் சந்தைக்குள் புகுந்து நல்ல லாபம் பார்த்து விடுகின்றனர் என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்