ஜல்லி பரப்பிய நிலையில் முடங்கி கிடக்கும் சாலை சீரமைப்பு பணி

மார்த்தாண்டம் வடக்குரோட்டில் ஜல்லி பரப்பிய நிலையில் சாலை சீரமைப்பு பணி முடங்கி கிடப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-07-14 18:45 GMT

குழித்துறை, 

மார்த்தாண்டம் வடக்குரோட்டில் ஜல்லி பரப்பிய நிலையில் சாலை சீரமைப்பு பணி முடங்கி கிடப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடிநீர் குழாய்கள் பதிப்பு

குழித்துறை நகராட்சி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மார்த்தாண்டம் வடக்கு ரோடு ஞாறான்விளை செல்லும் பகுதியில் அமைந்துள்ளது. இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து குடிநீர் குழாய்கள் வடக்கு ரோடு வழியாக மார்த்தாண்டம் சந்திப்பு பகுதிக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து மார்த்தாண்டம் மற்றும் குழித்துறை பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக வடக்குரோடு பகுதியில் சாலை தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த சாலையில் கால்வாய் போல பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டு போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வருகிறது.

இந்த வடக்கு ரோடு பகுதியில் தனியார் மேல்நிலை பள்ளிகள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் உள்ளன. இந்த சாலை சேதமடைந்து உள்ளதால் அந்த வழியாக செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

சீரமைப்பு பணி

எனவே சாலையை சீரமைத்து தார்போட வேண்டும் என்று பொதுமக்களும் அரசியல் கட்சிகளும் போராட்டங்கள் நடத்தின. இதையடுத்து சமீபத்தில் சாலைைய சீரமைக்கும் பணி தொடங்கியது. இதற்காக சாலையின் பக்கவாட்டில் கால்வாய் போல கிடந்த பகுதிகளில் ஜல்லி பரப்பி நிரப்பப்பட்டது.

அதன்பின்பு எந்த பணியும் செய்யாமல் ஒரு வாரத்திற்கு மேலாக அப்படியே முடங்கி கிடக்கிறது. இது முன்பு இருந்ததை விட படுமோசமான நிலையில் காணப்படுகிறது. இதனால் மக்கள் நடந்து செல்ல முடியாமலும் வாகனங்களில் செல்ல இயலாமலும் அவதிப்படுகிறார்கள். குறிப்பாக வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள்.

ஜல்லிகள் பெயர்ந்த நிலையில் உள்ளதால் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுவது வாடிக்கையாக உள்ளது.

எனவே முடங்கி கிடக்கும் சாலை பணியை உடனே தொடங்கி முடிக்க வேண்டும் என்று பொதுமக்களும் மாணவ- மாணவிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்