சேறும், சகதியுமாக காணப்படும் சாலை
நாகூர் தர்கா குளத்தை சுற்றி சேறும், சகதியுமாக காணப்படும் சாலை சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.;
நாகூர்:
நாகூர் தர்கா குளத்தை சுற்றி சேறும், சகதியுமாக காணப்படும் சாலை சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
நாகூர் தர்கா
நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு நாள்தோறும் உள்ளூர், வெளியூர், வெளி மாநிலத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
தர்கா குளத்தை சுற்றி தர்காகுளம் மேல்கரை, கீழ்கரை, வடகரை, தென்கரை பகுதிகளில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
தர்காகுளம் வடகரை வழியாக ெரயில் நிலையம் செல்லும் முக்கிய சாலையாக இருந்து வருகிறது. இந்த சாலை அமைத்து 10 ஆண்டுகள் ஆகிறது. தற்போது அந்த சாலை பள்ளம் ஏற்பட்டு குண்டும், குழியுமாக காணப்படுகிறது.
சேறும், சகதியுமான சாலை
அந்த சாலை வழியாக வாகனங்களின் செல்லுபவர்கள் தடுமாறி கீழே விழும் நிலை ஏற்படுகிறது. அதிக அளவில் பொதுமக்கள் நடந்து செல்லும் முக்கிய சாலையாகவும் இருந்து வருகிறது. மழைக்காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது.
இதில் கொசுகள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இரவு நேரங்களில் வாகனங்களில் செல்பவர்கள் பள்ளங்கள் இருப்பது தெரியாமல் கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.
சீரமைக்க வேண்டும்
இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தர்கா குளத்தை சுற்றி உள்ள நான்கு பகுதிகளிலும் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.