சிதிலமடையும் சமணர் படுகைசீரமைக்கப்படுமா?
வரலாற்றின் எச்சங்களாய் மிச்சம் இருக்கிற சமணர் படுகையை சீரமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளுக்கு, பஞ்சம் இல்லாத மாவட்டமாக தேனி திகழ்கிறது. இதுமட்டுமின்றி, பல்வேறு நிகழ்வுகளின் அடையாளமாக இங்கு ஏராளமான வரலாற்று சின்னங்கள் கொட்டிக்கிடக்கிறது.
அதில் ஒன்று தான், உத்தமபாளையத்தில் உள்ள சமணர் படுகை. உத்தமபாளையத்தில் சமணர்கள் வாழ்ந்துள்ளனர். இதற்கு அங்குள்ள சமணர் படுகை தான் சாட்சியாக உள்ளது.
சமணர் படுகை
உத்தமபாளையத்தில் திருகுணகிரி என்ற மலை உள்ளது. இது மொட்டை மலை, சமணர் மலை, கருப்பணசாமி மலை என்று பலப்பெயர்களில் அழைக்கப்படுகிறது. இந்த மலையில் தங்கியிருந்து, மகாவீரர் உள்ளிட்ட தீர்த்தங்கரர்களின் உருவங்களை செதுக்கி வைத்து சமணர்கள் வழிபாட்டு தலங்களாக மாற்றி உள்ளனர்.
அன்னதானம், அறிவுதானம், அடைக்கல தானம், ஹவுசித தானம் ஆகியவை இங்கு நடந்துள்ளது. மன்னர்களுக்கும், மக்களுக்கும் மருத்துவ சிகிச்சை அளித்த மகத்தான தகவல்களும் திருகுணகிரி மலையில் உள்ள கல்வெட்டுகளில் இடம்பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு.
உத்தமபாளையத்தில் உள்ள சமணர் படுகை, சுமார் 1,000 ஆண்டுகள் பழமையானது ஆகும். இதன் கிழக்குப்புறத்தில் சமண சிற்பங்கள் உள்ளன. அவற்றை பாதுகாப்பதற்காக கல் மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. 6 கல்தூண்களையும், மேற்புறம் நீண்ட கற்களையும் கொண்டதாக இந்த கல்மண்டபம் உள்ளது.
பாறைகளில் பல்வேறு உருவங்கள்
சமண மதத்தின் 23-வது தீர்த்தங்கரரான பார்சுவநாதர், 24-வது தீர்த்தங்கரரான மகாவீரர் ஆகியோரது உருவங்கள் இங்குள்ள பாறைகளில் 2 வரிசைகளில் செதுக்கப்பட்டுள்ளன. முதல் வரிசையில் 6-ம், 2-வது வரிசையில் 8 சிற்பங்களும் இடம்பெற்றுள்ளன.
ஆடையின்றி நின்ற நிலையில் உள்ள பார்சுவநாதர் சிற்பத்தின் தலைக்கு மேல் 5 தலை நாகம் காணப்படுகிறது. பக்கவாட்டில், சாமரம் வீசும் பெண் சிற்பங்களும் இடம்பெற்றுள்ளது. இந்த சிற்பங்களின் மேல், சூரிய ஒளி படாமல் இருப்பதற்கு திரைகள் இருந்துள்ளது. தற்போது சிற்பங்களை மறைப்பதற்கான திரைகள் அங்கு இல்லை.
சிற்பங்களின் அருகே, வட்டெழுத்துக்களால் ஆன வாசகங்கள் உள்ளன. இதில் அரட்டணமி பெரியார், அஜனந்தி ஆகிய சமண முனிவர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. இதேபோல் கல்மண்டபத்துக்குள் 20 அடி நீளமும், 10 அடி உயரமும் கொண்டதாக சமணப்பள்ளி அமைந்துள்ளது.
அணையா விளக்கு
9-ம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டிய மன்னன் சடையன் மாறன், ஆயிரம் பொற்காசுகளை இந்த சமண பள்ளிக்கு வழங்கிய தகவலும் உள்ளது. இதுமட்டுமின்றி ஒவ்வொரு சிற்பத்தின் கீழ் பகுதியிலும், அதை செய்து கொடுத்தவர்களின் பெயர்கள் வட்டெழுத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. இங்கு 19 சிற்பங்கள் உள்ளன. இங்குள்ள அனைத்து கல்வெட்டுகளும் தமிழ் எழுத்தின் பழைய வடிவங்களில் ஒன்றான வட்டெழுத்தில் செதுக்கப்பட்டுள்ளன.
சமணப்பள்ளியில், அணையா விளக்கு ஒன்றை அமைத்து பராமரித்து வந்த தகவலும் கிடைத்துள்ளது. மேலும் சேர, பாண்டிய நாட்டை சேர்ந்த வணிகர்கள் இங்கு தங்கி சென்றுள்ளனர். தமிழகத்திலேயே மேற்கு பகுதியில் இங்கு தான் சமணர் படுகை உள்ளது. சமணர் படுகையின் கீழ்ப்புறத்தில் அழகிய சுனை ஒன்று உள்ளது. பாறைகளுக்கு இடையே ஊற்றெடுக்கும் சுனைநீரை, பண்டைக்கால மக்கள் குடிநீராக பயன்படுத்தி உள்ளனர்.
ஆண்டிப்பட்டியில் சமணர் குகை
பல்வேறு வரலாற்று தகவல்களை தன்னகத்தே கொண்ட சமணர் படுகை, தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட பகுதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவை பாதுகாப்பற்ற நிலையில், தற்போது இருப்பது வேதனையே.
இதேபோல் ஆண்டிப்பட்டி அருகே அணைப்பட்டி என்ற ஊரில் உள்ள சித்தர் மலையில் சமணகுகை ஒன்று உள்ளது. இந்த குகையின் கிழக்குப்புறத்தில் ஒரு ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. குதிரையை செலுத்துவது போன்ற செந்நிறத்தில் இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது. குதிரை மீது ஏறிய மனிதன், குதிரையாக மாறுவது போல அந்த ஓவியம் காட்சி அளிக்கிறது.
தேனிமாவட்டத்தை பொறுத்தவரை சமண சமயத்தை பின்பற்றுவோரின் எண்ணிக்கை குறைந்து விட்டது. இருப்பினும் மதுரை, காஞ்சீபுரம், மன்னார்குடி, வந்தவாசி, ஆற்காடு, போளூர் ஆகிய பகுதிகளில் வசிக்கிற சமண மதத்தை சேர்ந்தவர்கள் உத்தமபாளையத்தில் உள்ள சமணர் படுகைக்கு வந்து வழிபாடு நடத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
சிதிலமடையும் சமணர் படுகை
தேனி மாவட்டத்துக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளும் சமணர் படுகைக்கு வந்து பார்வையிட்டு செல்கின்றனர். அதேநேரத்தில் சமணர் படுகை நாளுக்கு நாள் சிதிலமடைந்து கொண்டிருக்கிறது. சமூக விரோதிகளின் கூடாரமாக திகழ்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே சமணர் படுகையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக தேனி மாவட்டத்தை சேர்ந்த சிலரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-
பஞ்சு ராஜா (தேனி மாவட்ட வரலாற்று ஆய்வு மைய தலைவர்):-
'சமணம்' என்ற சொல், `சிரமண' என்னும் வடசொல்லின் திரிபு ஆகும். இதனால் `சிரமணர்' தமிழில் `சமணர்` என அழைக்கப்பட்டனர். சமணர் என்பதற்கு இன்பம்- துன்பம் இரண்டையும் சமமாக கருதுபவர் என்று பொருள் கொள்ளலாம். நட்பு, பகை அற்றவர் எனவும் கூறலாம். ஒழுக்கத்தை, உயிரினும் மேலாக காப்பவர் என்று விரிவான பொருளை தருவதாகவும் கொள்ளலாம். பழமையான வேதமாகிய ரிக்வேதம் சமணத்தை பறைசாற்றுகிறது.
சமூக விரோதிகளின் கூடாரம்
அப்துல் காதர் (தமிழ்த்துறை பேராசிரியர் உத்தமபாளையம்):-
கம்பம் பள்ளத்தாக்கில் சமணர்களுடைய வாழ்வியல்தலமாக இந்த இடம் இருந்திருப்பதால், இது போன்ற வேறு சில இடங்களும் இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்வது அவசியமான ஒன்றாகும். தமிழ்த்துறை மாணவர்களுக்கு, இந்த இடத்தின் வரலாற்றை போதித்து வருகிறோம். வரலாற்று சின்னங்களை தன்னகத்தே கொண்ட சமணர் படுகை, தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாகி விட்டது வேதனை அளிக்கிறது. திறந்தவெளி பார்போல அங்கு வைத்து மதுபானம் குடிக்கின்றனர். 1,000 ஆண்டுகால வரலாற்றை சொல்லும் இங்குள்ள கல்வெட்டுகளில் இழிவான சொற்களை சிலர் எழுதி வைத்துள்ளனர். கல்வெட்டுகளை கிறுக்கி சேதப்படுத்தும் அவலநிலை தொடர்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தான் இப்பகுதியை கலாசாரமிக்க இடம் என்று தொல்லியல் துறை அறிவித்தது. ஆனால் தற்போது அந்த அறிவிப்பு பலகையே நெளிந்து போய் விட்டது. வரும் தலைமுறையினர் இவ்விடத்தின் வரலாற்றை அறிய எஞ்சியிருக்கும் சின்னங்களை பாதுகாக்க அரசும், தொல்லியல் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேர, சோழ, பாண்டியர்
சீனிவாசன் (பேராசிரியர், உத்தமபாளையம்):- சங்ககாலத்தில் சமணம், புத்த மதங்கள் இருந்ததாக தமிழ் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். சேர, சோழ, பாண்டிய மன்னர் காலத்தில் தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதிக்கு சமணர்கள் வந்ததாக தெரிகிறது. இங்கு அமைந்துள்ள சமணர் படுகையில் 2 வகையான சிலைகள் உள்ளன. பாம்புக்கு கீழே இருப்பவர் பார்சுவநாதர் என்றும், 3 குடைகளுக்கு கீழே இருப்பவர் மகாவீரர் என்றும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். முதலாவது பாண்டிய மன்னன் சடையமாறன், இங்குள்ள சமணர் படுகையில் அணையா விளக்கு எரிய ஆயிரம் பொன்களை கொடுத்துள்ள தகவல் அங்குள்ள கல்வெட்டு மூலம் ெதரியவருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சுற்றுலா பயணிகள் காத்திருப்பு
சமணர்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாக உள்ள எச்சங்களின் (வரலாறு), மிச்சங்களாக சமணர் படுகை உள்ளது. ஆனால் அவை போதிய பராமரிப்பு இன்றி சிதிலமடைந்து காணப்படுவது வேதனை அளிப்பதாக இருக்கிறது. எனவே அவற்றை சீரமைத்து, போற்றி பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தொல்லியல் துறைக்கு உள்ளது. இதற்கான முயற்சியில், தொல்லியல் துறை ஈடுபடுமா? என்று வழிமேல் விழி வைத்து சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.