கூடன்குளம் அணுமின் நிலையத்தில் பாறை இடுக்கில் சிக்கிய மிதவை கப்பலை மீட்கும் பணி தீவிரம்..!

கூடன்குளம் அணுமின் நிலையத்தில் பாறை இடுக்கில் சிக்கிய மிதவை கப்பலை மீட்கும் பணி 2-வது நாளாக நடைபெற்று வருகிறது.

Update: 2023-09-10 02:24 GMT

நெல்லை,

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடந்து வருகிறது. மேலும் 4 அணு உலைகள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இதில் 3, 4-ம் அணு உலைக்கான பணிகள் இறுதிக்கட்ட நிலையை அடைந்துள்ளது. 4, 5-ம் அணு உலைக்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

இந்த அணு உலைகளில் பயன்படுத்தப்படும் 2 நீராவி ஜெனரேட்டர் எந்திரங்கள் ரஷியாவில் இருந்து கடல் மார்க்கமாக தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்தது. பின்னர் அங்கிருந்து மிதவை கப்பலில் 2 நீராவி ஜெனரேட்டர்களும் ஏற்றப்பட்டன. அதை இழுவை கப்பல் மூலம் இழுத்தபடி கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள சிறிய துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து சுமார் ஒரு நாட்டிக்கல் மைல் தொலைவில் வந்தபோது, திடீரென மிதவை கப்பலுக்கும், இழுவை கப்பலுக்கும் இடையேயான இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் மிதவை கப்பல் கடல் அலையில் அடித்து செல்லப்பட்டு, அங்குள்ள பாறையில் தட்டியபடி நிற்கிறது.

இந்த நிலையில், 2-வது நாளாக இன்றும் மிதவை கப்பலை மீட்கும் பணியில் அணுமின் நிலைய ஊழியர்கள், தனியார் ஒப்பந்த நிறுவனத்தினர் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கப்பலை மீட்க பலூன் டெக்னாலஜி மூலம் பாறை இடுக்கில் இருந்து கப்பலை இழுக்க முயற்சிப்பது, மேலும் ஒரு இழுவை கப்பலை கொண்டு, உதிரி பாகங்களை மாற்ற முயற்சிப்பது மற்றும் சிக்கியுள்ள கப்பலில் நீர் நிரப்பி சமன்படுத்தி, நீர்மட்டம் உயரும் வரை காத்திருந்து மீட்பது என 3 விதமான பரிந்துரைகளை வல்லுனர் குழு வழங்கியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்