4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரவுடி கைது

நாகர்கோவிலில் கொலை வழக்கில் 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரவுடி கைது செய்யப்பட்டார்.

Update: 2023-10-07 22:13 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் கொலை வழக்கில் 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரவுடி கைது செய்யப்பட்டார்.

கொலை வழக்கு

குமரி மாவட்டத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத நபர்கள் மீது கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பிப்பது வழக்கமான நடைமுறை. பின்னர் சம்பந்தப்பட்ட நபர்களை வாரண்டு குற்றவாளிகள் என அறிவித்து அவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொள்வார்கள். இந்தநிலையில் அந்த வாரண்டு குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தீவிர நடவடிக்கை எடுத்தார்.

இதை தொடர்ந்து தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வாரண்டு குற்றவாளிகளை கைது செய்து வருகிறார்கள். அந்த வகையில் கொலை வழக்கில் 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த செந்தில் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தலைமறைவு

அதாவது நாகர்கோவில் பெருவிளை பகுதியை சேர்ந்தவர் மோகன். இவர் கடந்த 2010-ம் ஆண்டு ஒழுகினசேரி பகுதியில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சொத்தவிளை ஒசரவிளையை சேர்ந்த செந்தில் என்ற தாதா செந்தில் (வயது 63) என்பவர் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த செந்திலுக்கு கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. இதை தொடர்ந்து கோர்ட்டில் நடைபெற்ற விசாரணைக்கு செந்தில் ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டார். இதனால் கடந்த 2019-ம் ஆண்டு அவருக்கு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. இதனையடுத்து செந்திலை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

கைது

இந்த நிலையில் தனிப்படை போலீசார் செந்திலை நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை வடசேரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதான செந்தில் மீது மேலும் சில கொலை வழக்குகள் உள்ளன. சுசீந்திரம் போலீஸ் நிலைய ரவுடிகள் பட்டியலிலும் செந்தில் பெயர் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்