தாமிரபரணி ஆற்றில் மனுக்களை விட்டு நூதன போராட்டம் நடத்திய பொதுமக்கள்

நெல்லை தாமிரபரணி ஆற்றில் மனுக்களை விட்டு பொதுமக்கள் நூதன போராட்டம் நடத்தினர்.

Update: 2023-09-11 20:11 GMT

நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார்.

இந்த நிலையில் பாளையங்கோட்டை மனக்காவலன்பிள்ளை நகரை சேர்ந்த மணி என்பவர் தலைமையில் கவுன்சிலர் பவுல்ராஜ் மற்றும் ஏராளமான பொதுமக்கள் சாந்திநகர் 11-வது தெருவில் செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். ஏற்கனவே அவர்கள் பலமுறை மனு கொடுத்தும் இந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அப்பகுதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் முன்புள்ள தாமிரபரணி ஆற்றில் இறங்கி ஆற்றில் மனுவை போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லையப்பர் கோவில் சுற்று சுவரையொட்டி கழிப்பறை அமைக்க கூடாது என்று கூறி பா.ஜனதா மாவட்ட செயலாளர் செந்தில்குமார் கலெக்டரிடம் மனு கொடுத்தார்.

தச்சநல்லூர் 1-வது வார்டு மல்லிகை மற்றும் ரோஜா தெருமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் புதிய இறைச்சி கடைகளை அமைப்பதால் சுகாதாரக்கேடும், துர்நாற்றமும் ஏற்படும். எனவே எங்கள் பகுதியில் இறைச்சிக்கடை நடத்துவதற்கு அனுமதி மறுத்து குடியிருப்பு இல்லாத இடத்தில் இறைச்சி கடைகளை அமைக்க அனுமதிவழங்க வேண்டும் என்று மனு கொடுத்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பாப்பாக்குடி ஒன்றிய செயலாளர் மாரி செல்வம், கருப்பசாமி ஆகியோர் தலைமையில் பனையங்குறிச்சி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தங்கள் ஊருக்கு பஸ் வசதி செய்து தர வேண்டும் என்று கூறி மனு கொடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்