பஸ் நிலைய பகுதி திறந்தவெளி கழிப்பிடமாக மாறியதால் பொதுமக்கள் அவதி
பஸ் நிலைய பகுதி திறந்தவெளி கழிப்பிடமாக மாறியதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.;
அரியலூர் நகராட்சிக்கு சொந்தமான பஸ் நிலையம் கடந்த ஏப்ரல் மாதம் 21-ந் தேதி முழுவதுமாக மூடப்பட்டது. பின்னர் அங்கு புதிய கட்டுமான பணிகள் தொடங்கின. இருப்பினும் அங்கிருந்த அம்மா உணவகம், கட்டணக் கழிப்பிட கட்டிடங்கள் இடிக்கப்படவில்லை. அலுவலக வளாகம் முழுவதும் வேலி வைத்து மூடப்பட்டது. இந்நிலையில் அப்பகுதியில் அண்ணா சிலை அருகில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள், கழிவறை இல்லாமல் அவதிப்பட்டனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று பஸ் நிலைய கழிவறையை குறிப்பிட்ட காலத்திற்கு திறக்க கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி தண்ணீர் வசதியுடன் கழிவறை செயல்பட்டு வந்தது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு மின் கட்டண தொகை செலுத்தப்படவில்லை என்று, கட்டண கழிவறை மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் மின் மோட்டார் மூலம் தண்ணீர் ஏற்ற முடியவில்லை. தினமும் ஏராளமானவர்கள் அந்த கழிவறையை பயன்படுத்தி வருவதால், தண்ணீர் இல்லாமல் துர்நாற்றம் வீசத் தொடங்கியது.
இதனால் மாவட்ட நூலகம், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு பின்பகுதியில் பொதுமக்கள் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் நூலகத்திற்கு வருபவர்கள் மூக்கை பிடித்துக் கொண்டு இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. கட்டுமான பணி நடைபெற்று வரும் பஸ் நிலைய வளாகம் முழுவதும் தற்போது திறந்தவெளி கழிப்பிடமாக மாறிவிட்டது. எனவே கழிவறைக்கு மீண்டும் மின் இணைப்பு வழங்கி, அதனை சுத்தம் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அல்லது அதனை முழுமையாக மூடிவிட்டு சமுதாயக்கூடம் அருகில் இருக்கும் கழிவறையை திறந்து விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.