பழுதடைந்த பள்ளி கட்டிடத்தை முழுமையாக இடிக்காததால் பொதுமக்கள் அச்சம்

கனகம்மாசத்திரம் அருகே பழுதடைந்த பள்ளி கட்டிடத்தை முழுமையாக இடிக்காததால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Update: 2022-11-07 11:25 GMT

பழுதடைந்த கட்டிடம்

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியகளக்காட்டூர், திருவாலங்காடு, காஞ்சிபாடி, இலட்சுமாபுரம், நெடும்பரம், பனப்பாக்கம், தொழுதாவூர், வீரராகவபுரம், குப்பம்கண்டிகை, வேணுகோபாலபுரம், அரிசந்திராபுரம், இராமாபுரம், நெமிலி, சிவ்வாடா, பூனிமாங்காடு, மாமண்டூர் மற்றும் ஜாகீர்மங்களம் ஆகிய 17 ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி, தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி 22 கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்து மீண்டும் புனரமைத்து பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்டது. இந்த கட்டிடத்தை இடிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.

கோரிக்கை

இதனைத் தொடர்ந்து லட்சுமாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட தாசிரெட்டி கண்டிகை கிராமத்தில் சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தும் பணிகள் கடந்த மாதம் 17-ந்தேதி தொடங்கி சில நாட்களிலே பாதி கட்டிடத்தை இடித்து அகற்றினர். வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் பரவலாக பெய்து வருவதால் சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் விரைந்து அகற்றுமாறு ஒன்றிய நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது. ஆனால் தாசிரெட்டி கண்டிகையில் 3 வாரங்களாகியும் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பள்ளி கட்டிடத்தை அகற்றும் பணி நடைபெறாமல் உள்ளது.

சேதமடைந்த பள்ளி கட்டிடத்திற்கு அருகில் பயிலும் மாணவர்களுக்கு இந்த கட்டிடத்தால் விபரீதம் ஏற்படும் முன் பள்ளி கட்டிடத்தை அகற்ற திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்