குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்
அழகர் மலை கிராமத்தில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.;
ஊட்டி,
அழகர் மலை கிராமத்தில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
நீலகிரி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். அதன்படி, நாம் தமிழர் கட்சி மாவட்ட தலைவர் ஜெய்குமார் தலைமையில் அழகர் மலை கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
உல்லத்தி ஊராட்சிக்கு உட்பட்ட அழகர் மலை கிராமத்தில் 350 குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்களது வீடுகள் மலை பகுதியில் உள்ளதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. அப்பகுதியில் பிரதம மந்திரியின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய்களை இணைக்கும் பணி முடிவடைந்தது. அங்கு ஒப்பந்ததாரர் அந்த பணியை சரிவர செய்யாததால், ஜல் ஜீவன் திட்ட குடிநீர் அழகர் மலை பகுதிக்கு முறையாக வினியோகம் செய்வது இல்லை.
குடிநீர் பிரச்சினை
இதனால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர். இந்த அவல நிலையை போக்க கலெக்டர், வட்டார வளர்ச்சி அலுவலர் கிராமத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்து, குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். மேலும் புதிதாக பம்ப் ஆபரேட்டர்களை நியமனம் செய்து, தங்கு தடையின்றி அழகர் மலை பகுதிக்கு குடிநீர் வழங்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் அறிவுறுத்தினார்.