தக்காளி விலை கிடு, கிடு உயர்வு

கோபால்பட்டி பகுதியில் தக்காளி விலை கிடு, கிடுவென உயர்ந்து வருகிறது.

Update: 2023-06-19 16:31 GMT

 தக்காளி கொள்முதல்

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை தக்காளி சீசன் ஆகும். இந்த காலக்கட்டத்தில் வேம்பார்பட்டி, அஞ்சுகுளிப்பட்டி, மணியக்காரன்பட்டி, கணவாய்பட்டி, வலசு, ஜோத்தாம்பட்டி, ராமராஜபுரம், ஆவிளிபட்டி, முளையூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விளைவிக்கப்படும் தக்காளிகளை கோபால்பட்டியில் செயல்படுகிற தக்காளி கமிஷன் கடைகளுக்கு விவசாயிகள் கொண்டு வருவார்கள்.

இந்த கடைகளில் ஏலம் விட்டு தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. திண்டுக்கல், தேவக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, சிங்கம்புணரி, பரமக்குடி உள்ளிட்ட வெளியூர் வியாபாரிகள் இங்கு வந்து ஏலம் எடுத்து தக்காளிகளை கொள்முதல் செய்வர்.

கிடு, கிடு உயர்வு

இந்தநிலையில் கடந்த மார்ச் மாதம் சீசன் தொடங்கிய நிலையில் 15 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.50-க்கு விற்பனை ஆனது. அதன்பிறகு ஒவ்வொரு மாதத்திலும் தக்காளி விலை ஏறுமுகமாகவே இருந்தது. படிப்படியாக 15 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.100 வரை விற்பனையானது.

ஆனால் கடந்த 15 நாட்களாக, கமிஷன் கடைகளுக்கு தக்காளி வரத்து குறைந்து விட்டது. இதன் எதிரொலியாக கிடு, கிடுவென விலை உயர்ந்து வருகிறது. அதன்படி 15 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டி ரூ.550 முதல் ரூ.600 வரை நேற்று விற்பனையானது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்