வெயிலின் தாக்கத்தால் இளநீர் விலை உயர்வு

குமரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கத்தால் இளநீர் விலை உயர்ந்து ரூ.50-க்கு விற்கப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2023-04-18 18:45 GMT

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கத்தால் இளநீர் விலை உயர்ந்து ரூ.50-க்கு விற்கப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சுட்டெரிக்கும் வெயில்

குமரி மாவட்டத்தில் பொதுவாக இரண்டு பருவமழை மட்டுமின்றி கோடை மழையும் தவறாமல் பெய்யும். இதனால் கோடை காலம் என்பது குமரி மாவட்ட மக்களுக்கு பெரிய அளவில் தொந்தரவாக தெரியாது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த சீதோஷ்ண நிலை மாறி வருகிறது. வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில்தான் கோடை வெயிலின் தாக்கம் சற்று தெரியும். அக்னி நட்சத்திர நாட்களில் அதைவிட சற்று கூடுதலாக இருக்குமே தவிர வெயில் வாட்டி வதைத்தது இல்லை.

ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதியிலேயே வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. அதிலும் தற்போது மண்டையை பிளக்கும் அளவுக்கு வெயில் அடிக்கிறது. காலை 9 மணிக்கு மேல் தெருவில் இறங்கி நடக்க பொதுமக்கள் தயங்குகிறார்கள். வேலை காரணமாக வெளியே சென்று தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டால் மட்டுமே செல்கிறார்கள்.

பகலில் நிலைமை இப்படி இருக்க, இரவில் அதைவிட பெரிய கொடுமையாக உள்ளது. கதவு, ஜன்னலை திறந்து வைத்திருந்தாலும் புழுக்கம் வாட்டி வதைக்கிறது. இதனால் இரவிலும் தூக்கமின்றி தவிக்கிறார்கள்.

இளநீர் விற்பனை

வெயிலின் கொடுமைகளை சமாளிக்க மக்கள் பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகிறார்கள். பெரும்பாலான பெண்களும், முதியவர்களும் குடை பிடித்தப்படி வெளியே செல்கிறார்கள். இளநீர், நுங்கு, சர்பத், மோர், தர்ப்பூசணி போன்ற குளிர்ந்த நீராகாரங்களை அவ்வப்போது பருகி வருகிறார்கள். தற்போது வெள்ளரிப்பிஞ்சு வரத்து தொடங்கியுள்ளது. இதற்காக சாலையோரங்களில் தற்காலிக கடைகள் பெருகிவிட்டன. பொதுமக்கள் இயற்கை பானங்களை அதிகளவில் சாப்பிடுவதால் அவற்றின் விலை கிடு கிடுவென உயர்ந்து வருகிறது.

வழக்கமாக ரூ.30-க்கு விற்பனை செய்யப்படும் சாதாரண இளநீர் தற்போது ரூ.40-க்கும், ரூ.35 முதல் ரூ.40-க்கு விற்பனை ஆகும் சிவப்பு இளநீர் ரூ.50-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனினும் வெப்பத்தை தணிக்க வேறு வழியில்லை என்ற நிலையில்தான் இளநீரை பொதுமக்கள் வாங்கி பருகுகிறார்கள். நாகர்கோவிலில் டிஸ்லரி ரோடு, டதி பெண்கள் பள்ளி சந்திப்பு, கோட்டார் போலீஸ் நிலையம் பகுதி, கலெக்டர் அலுவலக சாலை, பால்பண்ணை சந்திப்பு உள்ளிட்ட பல இடங்களில் இளநீர் விற்பனை அமோகமாக நடக்கிறது.

மழை

இப்படி எத்தனை வழிமுறைகளை கையாண்டாலும் அது அப்போதைய தீர்வாக மட்டுமே உள்ளது. வெப்பத்தின் கொடுமையில் இருந்து முழுமையாக தப்பிக்க, மழை தான் மருந்தாக இருக்க முடியும். எனவே கோடை மழை பெய்யுமா? உடலுக்கும், உள்ளத்துக்கும் குளிர்ச்சி கிடைக்குமா? என்பது வருண பகவான் கையில் தான் உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்