உக்கடம் மார்க்கெட்டில் மீன்கள் விலை குறைந்தது
உக்கடம் மார்க்கெட்டில் மீன்கள் விலை குறைந்தது
கோவை
கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டுக்கு தூத்துக்குடி, ராமேசுவரம், நாகை, கன்னியாகுமரி உள்பட கடலோர பகுதிகளில் இருந்து லாரிகள் மூலம் மீன்கள் கொண்டு வரப்படுகிறது. மேலும் அண்டை மாநிலமான கேரளாவின் கடலோர மாவட்டங்களில் இருந்தும் கொண்டு வந்து அதிகளவில் மீன்கள் விற்கப்படுகிறது. இது தவிர ஆழியாறு, திருமூர்த்தி அணை பகுதி மற்றும் குளங்களில் பிடிக்கப்படும் மீன்களும் விற்பனைக்கு வருகிறது.
இந்த நிலையில் கார்த்திகை மாதம் அசைவ உணவுகளை பெரும்பாலும் இந்துக்கள் தவிர்த்து விடுவது வழக்கம். மேலும் சபரிமலை சீசனும் தொடங்கியுள்ளது. இது தவிர வரத்தும் அதிகரித்து உள்ளதால், மீன் விலை குறைந்துள்ளது. ஆனாலும் விற்பனை இன்றி உக்கடம் மார்க்கெட் வெறிச்சோடி கிடக்கிறது.
இதுகுறித்து கோவை மீன் மார்க்கெட் வியாபாரிகள் சங்க துணை தலைவர் அப்பாஸ் கூறியதாவது:-
கார்த்திகை மாதம் பிறந்ததோடு சபரிமலை சீசனும் தொடங்கியதால் மீன் விற்பனை மந்தமாக உள்ளது. மேலும் மீன்களின் விலை மிகவும் குறைந்துள்ளது. ஆனாலும் பொதுமக்கள் வாங்க முன் வருவதில்லை. நேற்று(இன்று) ஒரு கிலோ வஞ்சிரம் ரூ.550 முதல் 650, பாறை ரூ.400, ஊளி ரூ.350, விலா மீன் ரூ.400, மத்தி ரூ.100, நெத்திலி ரூ.350, அயிலை ரூ.150, சங்கரா ரூ.300, செம்மீன் ரூ.400, கிளிமீன் ரூ.300, சால்மண் மீன் ரூ.700, பொன்னாரம் ரூ.700 மற்றும் ராமேசுவரம் புழு நண்டு ரூ.600, சதா நண்டு ரூ.300-க்கு விற்கப்படுகிறது.
இது தவிர ஒரு கிலோ ரோகு ரூ.160, கட்லா ரூ.160, நெய் ரூ.140, வாவல் ரூ.180-க்கு விற்பனையானது. வரத்து தொடர்ந்து அதிகரித்தால் விலை மேலும் குறை வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.