மாற்றுத்திறனாளிகளுக்கான ஆயத்த பயிற்சி மையம் தொடர்ந்து செயல்பட வேண்டும்
பூந்தோட்டம் நகராட்சி பள்ளி வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆயத்த பயிற்சி மையம் தொடர்ந்து செயல்பட வேண்டும் கலெக்டரிடம் பெற்றோர்கள் வலியுறுத்தல்;
விழுப்புரம்
விழுப்புரம் பூந்தோட்டம் நகராட்சி பள்ளி வளாகத்தில் செயல்படும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஆயத்த பயிற்சி மையத்தில் படித்து வரும் குழந்தைகளின் பெற்றோர், நேற்று விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகனிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
விழுப்புரம் பூந்தோட்டம் நகராட்சி பள்ளி வளாகத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக ஆயத்த பயிற்சி மையம் கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் 30 மாற்றுத்திறனாளி குழந்தைகள் சிறப்பு பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த மையத்துடன் மாவட்ட ஆதார வள மையமும் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 15 பேர் தினமும் தசை பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த 2 மையங்களிலும் பல்வேறு பகுதிகளில் இருந்து மாற்றுத்திறனுடைய குழந்தைகள் வந்து சிறப்பு பயிற்சி பெற்றுச்செல்கின்றனர். எங்களுக்கு இந்த மையங்களுக்கு வந்து செல்ல போக்குவரத்தும் ஏற்ற வகையில் உள்ளதால் சிரமம் இன்றி குழந்தைகளை நாங்கள் அழைத்து வருகிறோம். இந்த சூழலில் இந்த மையங்களை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக நாங்கள் அறிகிறோம். அவ்வாறு வேறு இடத்திற்கு மாற்றினால் எங்கள் குழந்தைகள் தொடர்ந்து பயிற்சிக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும். எனவே இந்த மையம், தொடர்ந்து அதே இடத்தில் செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.