ஓட்டல் உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய போலீஸ்காரர் பணியிடை நீக்கம்
திருப்பூரை அடுத்த பல்லடம் காரணம்பேட்டையில் ஓட்டல் நடத்தி வரும் உரிமையாளர் ஒருவர் பேசியதாக சமூக வலைதளத்தில் ஆடியோ வேகமாக பரவியது.;
திருப்பூர்,
திருப்பூரை அடுத்த பல்லடம் காரணம்பேட்டையில் ஓட்டல் நடத்தி வரும் உரிமையாளர் ஒருவர் பேசியதாக சமூக வலைதளத்தில் ஆடியோ வேகமாக பரவியது. அதில் பேசிய ஓட்டல் உரிமையாளர், பல்லடம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸ்காரர் ஒருவர், தன்னிடம் அடிக்கடி மாமூல் கேட்டு மிரட்டுவதாகவும், தினமும் ஓட்டலுக்கு வந்து தனது நண்பர்களுடன் சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் சென்று விடுவதாகவும், பணம் கேட்டு மன உளைச்சல் செய்வதாகவும், நான் தற்கொலை செய்து கொண்டால் அதற்கு அந்த போலீஸ்காரர் தான் காரணம் என்றும், அந்த போலீஸ்காரருக்கு பணம் அனுப்பியதற்கான ஆதாரத்தையும் அவர் பதிவிட்டு வெளியானது. பல்லடம் பகுதியில் சமூக வலைதளத்தில் வேகமாக பரவிய இந்த ஆடியோவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் உத்தரவின் பேரில் உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர், பல்லடம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய சிறப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸ்காரரான சுபின் பிரபு என்பதும், அவர் முதல்நிலை காவலர் என்பதும் தெரியவந்தது. அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி அறிக்கையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து போலீஸ்காரர் சுபின் பிரபுவை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேற்று உத்தரவிட்டார்.