குற்றவழக்குகளில் உள்ளவர்களை வரவழைத்து போலீசார் கையெழுத்து
குற்றவழக்குகளில் உள்ளவர்களை வரவழைத்து போலீசார் கையெழுத்து வாங்கினர்.
ஆரணி
குற்றவழக்குகளில் உள்ளவர்களை வரவழைத்து போலீசார் கையெழுத்து வாங்கினர்.
பொங்கலையொட்டி ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ஆளுகைக்கு உட்பட்ட ஆரணி டவுன், ஆரணி கிராமிய காவல் நிலையம், களம்பூர், சந்தவாசல், கண்ணமங்கலம் போலீ்ஸ் நிலைய எல்லை பகுதிகளை உள்ளடக்கிய குற்ற வழக்குகளில் ெதாடர்புடைய 80 பழைய ரவுடிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டது. இவர்களில் 40 பேர் அவரவர் ஊர்களில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது பொங்கல் பண்டிகையையொட்டி வெளியூரிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரவுடிகள் ஈடுபடக்கூடாது என எச்சரிக்கும் வகையில் அவர்கள் ஆரணி போலீஸ் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களை போலீஸ் நிலையம் முன் நிற்க செய்து போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் ஒலிபெருக்கியில் பேசி எச்சரிக்கை செய்து அறிவுரை வழங்கினார்.
பின்னர் அவர்களிடம் அது குறித்து கையொப்பம் பெறப்பட்டது.
மேலும் ரவுடி பட்டியலில் உள்ள மற்றவர்கள் வேலையின் காரணமாக வெளியூரில் உள்ளதால் அவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைதியான முறையில் பொங்கல் விழா நடைபெற வேண்டும் என இப்பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தெரிவித்தார்.