மீனவர்கள் கைது செய்யப்படும் அவலம் இனியும் தொடரக்கூடாது: அன்புமணி ராமதாஸ்
மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த 13 மீனவர்கள் வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காங்கேசன்துறை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டு மீனவர்கள் தாங்கள் பாரம்பரியமாக மீன்பிடித்து வந்த பகுதிகளில்தான் மீன்பிடித்து வருகின்றனர் என்ற போதிலும், அவர்களை இலங்கைகடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருவது கண்டிக்கத்தக்கது.
வங்கக்கடலில் மீன்பிடிப்பதற்காக விதிக்கப்பட்ட 2 மாத தடைக் காலம் முடிவடைந்து ஜூன் 16-ம் தேதிதான் தமிழக மீனவர்கள் வங்கக்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அதன்பின் 35 நாட்கள் மட்டுமே ஆகும் நிலையில் இதுவரை 7 கட்டங்களில் மொத்தம் 89 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 10 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக கைது செய்யப்பட்ட மீனவர்கள் 35 நாட்களுக்கும் மேலாக சிறையில் வாடும் நிலையில் இதுவரை அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை.
தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்து கைது செய்தது மட்டுமின்றி, அவர்களை ஒரு மாதத்திற்கும் மேலாக சிறையில் அடைத்து வைத்திருப்பது மனிதநேயமற்ற செயலாகும். இப்போது கைது செய்யப்பட்டவர்களையும் சேர்த்து 89 மீனவர்கள் சிறையில் வாடி வரும் நிலையில், அவர்களை நம்பியுள்ள குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து வறுமையில் வாடிக்கொண்டிருக்கின்றன.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக முதல்-அமைச்சரோ, ஒவ்வொரு முறை மீனவர்கள் கைது செய்யப்படும்போது வெளியுறவுத்துறை மந்திரிக்கு கடிதம் எழுதுவதுடன் அவரது கடமையை முடித்துக் கொள்கிறார். வெளியுறவுத்துறை மந்திரியோ, பிரதமரையோ சந்தித்து இது குறித்து பேச எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் அவலம் இனியும் தொடரக்கூடாது. மத்திய அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் விடுதலை செய்யவும், அவர்களின் படகுகளை மீட்டுத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக மத்திய அரசுக்கு அனைத்து வழிகளிலும் தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.