தோட்ட தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
கீரிப்பாறையில் அரசு ரப்பர் தொழிற்கூடம் முன் தோட்டத் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அழகியபாண்டியபுரம்:
கீரிப்பாறையில் அரசு ரப்பர் தொழிற்கூடம் முன் தோட்டத் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காத்திருப்பு போராட்டம்
அரசு ரப்பர் தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வை உயர்த்தி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது. ஊதியத்தை உயர்த்தி வழங்காத அரசை கண்டித்து தினமும் அரசு ரப்பர் தொழிற்கூடம் முன் காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அதன்படி நேற்று கீரிப்பாறை அரசு ரப்பர் தொழிற்கூடம் முன்பு தொழிலாளர்கள் திரண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு ஐ.என்.டி.யு.சி. தலைவர் பால்ராஜ், குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் செய்யது அலி ஆகியோர் தலைமை தாங்கி போராட்டத்தை தொடங்கி வைத்தனர்.
போலீஸ் பாதுகாப்பு
போராட்டத்தில் ஆண்கள், பெண்கள் என 120 தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டு கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தையொட்டி கீரிப்பாறை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த போராட்டம் வருகிற 12-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதன்பிறகும் அரசு நடவடிக்கை எடுக்க விட்டால் வருகிற 14-ந்தேதி நாகர்கோவிலில் உள்ள நிர்வாக இயக்குனர் அலுவலகம் முன் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தொழிலாளர்கள் கூறினர்.