குழாய் உடைந்து அருவி போல் கொட்டிய குடிநீர்

கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் குழாய் உடைந்து அருவி போல் குடிநீர் கொட்டியது.

Update: 2023-02-19 18:45 GMT

கிணத்துக்கடவு

கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் குழாய் உடைந்து அருவி போல் குடிநீர் கொட்டியது.

கூட்டு குடிநீர் திட்டம்

பொள்ளாச்சி அருகே ஆழியாற்றில் இருந்து குறிச்சி-குனியமுத்தூர் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் கிணத்துக்கடவு பேரூராட்சி, குறிச்சி-குனியமுத்தூர் பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் திட்டத்தின் கீழ் ஆத்து பொள்ளாச்சி முதல் குனியமுத்தூர் வரை இரும்பு குழாய்கள் நிலத்துக்கு அடியில் பதிக்கப்பட்டு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.

அவை பெரும்பாலும் கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையோரம் செல்கிறது. மேலும் இந்த கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு 24 மணி நேரம் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

குழாய் உடைப்பு

இந்தநிலையில் திடீர் மின்தடை காரணமாக குறிச்சி-குனியமுத்தூர் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்களில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு வருகிறது. நேற்று காலை 6.30 மணியளவில் கோவில்பாளையம் சேரன் நகர் பகுதியில் உள்ள வளைவில் முருகேசன் என்பவரது வீட்டின் அருகே கூட்டு குடிநீர் திட்ட குழாயில் திடீரென விரிசல் ஏற்பட்டது.

தொடர்ந்து குழாய் உடைந்து குடிநீர் வெளியேறியது. இதனால் சாலையோரம் அருவி போன்று குடிநீர் கொட்டியது. அந்த குடிநீர், கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் குளம் போன்று தேங்கி கிடந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

காற்றழுத்தம்

இதுகுறித்து குறிச்சி-குனியமுத்தூர் கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் குழாயில் இருந்த குடிநீரை வடிகால் வாரிய அதிகாரிகள் அகற்றிவிட்டு, உடைப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். கிணத்துக்கடவு பகுதியில் கடுமையாக வெயில் வாட்டி எடுத்து வரும் நிலையில், குழாய் உடைந்து குடிநீர் சாலையில் வீணாக சென்றதை பார்த்த பொதுமக்கள் கவலை அடைந்தனர்.

இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறும்போது, காற்றழுத்தம் ஏற்பட்டதன் காரணமாக குழாயில் விரிசல் ஏற்பட்டு உடைந்து இருக்க வாய்ப்பு உள்ளது. குழாயில் இருக்கும் குடிநீரை முழுவதும் வெளியேற்றிவிட்டு, உடைப்பை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி நிறைவடைந்ததும் மீண்டும் கிணத்துக்கடவு, குறிச்சி, குனியமுத்தூர் பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்