பில்லூர் 3-வது குடிநீர் திட்டம் மே மாதம் பயன்பாட்டுக்கு வருகிறது

ரூ.780 கோடியில் செயல்படுத்தப்படும் பில்லூர் 3-வது குடிநீர் திட்டப்பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இயக்குனர் ஆய்வு செய்தார். இந்த திட்டம் மே மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-01-28 18:45 GMT

கோவை

ரூ.780 கோடியில் செயல்படுத்தப்படும் பில்லூர் 3-வது குடிநீர் திட்டப்பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இயக்குனர் ஆய்வு செய்தார். இந்த திட்டம் மே மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிநீர் வடிகால்வாரிய இயக்குனர் ஆய்வு

தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரிய மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி கோவை மாநகராட்சியால் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகளை நேற்று நேரில் ஆய்வு செய்தார். கோவை நகருக்கு கூடுதல் குடிநீர் வழங்க பில்லூரில் 3-வது குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த பணிகளையும் அவர் ஆய்வு செய்தார். கட்டான்மலை பகுதியில் பகிர்மான குழாய் பதிக்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உடன் இருந்தார். இந்த திட்டப்பணிகளின் செயல்பாடுகள் குறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-

தனி நபருக்கு 135 லிட்டர்

ரூ.780 கோடியில் செயல்படுத்தப்படும் பில்லூர் 3-வது குடிநீர் திட்டப்பணிகள் இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தி பயன்பாட்டுக்கு வரும்போது நகரில் தனி நபருக்கு தினமும் 135 லிட்டர் குடிநீர் வினியோகிக்கப்படும். இதற்காக மொத்தம் 90.76 கிலோ மீட்டர் தூரத்துக்கு பகிர்மான குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெறுகிறது.

இதுவரை 37 கிலோ மீட்டருக்கு பணிகள் முடிவடைந்துள்ளது. மேலும் 53 கிலோ மீட்டர் தூரத்துக்கு குழாய் பதிக்க நெடுஞ்சாலைத்துறை அனுமதி அளித்துள்ளது. இதில் 40 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. 178 எம்.எல்.டி. குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகளில் 91 சதவீதம் முடிந்துள்ளது. சுரங்கப்பாதை வடிவமைப்பு மற்றும் கட்டுமான பணிகள் 98 சதவீதம் முடிவடைந்துள்ளது.

மே மாதம் பயன்பாட்டுக்கு வருகிறது

குழாய்கள் அமைக்கவும், பிரதான தரைமட்ட தொட்டி அமைக்கவும் 156 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதில் 35.50 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலமாகவும், 121 ஏக்கர் நிலம் தனியாருக்கு சொந்தமானதாகவும் உள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றது. அனைத்து பணிகளும் முடிந்து இந்த திட்டம் வருகிற மே மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ரூ.442 கோடியில் செயல்படுத்தப்பட்டு வரும் குறிச்சி, குனியமுத்தூர் பாதாள சாக்கடை திட்டப்பணிகளையும் குடிநீர் வடிகால் வாரிய இயக்குனர் தட்சிணாமூர்த்தி ஆய்வு செய்து பணிகளை விரைவில் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்