தற்கொலை மிரட்டல் விடுத்தவர் தீயில் கருகி பலி

தற்கொலை மிரட்டல் விடுத்தவர் தீயில் கருகி பலி;

Update:2023-09-02 00:15 IST

ஈச்சனாரி

உடலில் பெட்ரோல் ஊற்றியதை மறந்து தற்கொலை மிரட்டல் விடுத்தவர் சிகரெட் பற்றவைத்த போது தீயில் கருகி பலியானார்.

டீக்கடை

கோவை ஈச்சனாரி பகுதியை சேர்ந்தவர் ஜோயல் சாம்ஜி (வயது 29). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. மேலும் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி அவர் தனது உறவினர் ஒருவரிடம் ரூ.1,000 கடன் பெற்று உள்ளார். பணத்துடன் வெளியே சென்ற அவர் சிறிது நேரம் கழித்து மது போதையில் வீட்டிற்கு வந்து உள்ளார். இதனை கண்ட குடும்பத்தினர் அவரை கண்டித்ததாக தெரிகிறது.

குடும்பத்தினர் கண்டித்ததால் கோபத்துடன் வெளியேறிய அவர், பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் வீட்டிற்கு வந்தார். அப்போதும் அவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து உறவினர்கள் அவரிடம் கேட்டதாக தெரிகிறது. அப்போது ஜோயல் சாம்ஜி ஒரு பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தனது உடலில் ஊற்றிக்கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதனால் அச்சம் அடைந்த அவரது உறவினர்கள் மீண்டும் அவரை கண்டித்தனர்.

உடலில் தீப்பற்றியது

இதையடுத்து அமைதியான ஜோயல் சாம்ஜி, தனது உடலில் பெட்ரோல் ஊற்றியதை மறந்து விட்டு சிறிது நேரம் கழித்து சிகரெட் புகைப்பதற்காக லைட்டரால் சிகரெட்டை பற்ற வைத்தார். அப்போது எதிர்பாரத விதமாக அவரது உடலில் தீ பற்றியது. தீ மள, மளவென்று உடல் முழுவதும் பரவியது. இதனால் அவர் வலி தாங்க முடியாமல் கூச்சலிட்டார்.

இதனை கண்ட உறவினர்கள் அவரது உடலில் பற்றிய தீயை அணைத்ததுடன், சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து சுந்தராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்