12 பவுன் நகைகளை கொள்ளையடித்த ஆசாமி கைது
கூடலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகைகள், ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
கூடலூர்,
கூடலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகைகள், ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
வீட்டில் கொள்ளை
கூடலூர் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் அரசு மணி. இவர் கடந்த 27.5.2022-ந் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு சென்றார். பின்னர் 16.6.2022-ந் தேதி தனது வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை மர்ம நபர் உடைத்து உள்ளே இருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கூடலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் தலைமையிலான போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
போலீசார் விசாரணை
ஆனால், குற்றவாளி குறித்து எந்தவித துப்பும் கிடைக்க வில்லை. தொடர்ந்து கூடலூர் நகர பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது சந்தேகப்படும்படி ஒருவர் கேமராக்களில் பதிவாகி இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து நபரின் விபரங்களை போலீசார் சேகரித்தனர். மேலும் கொள்ளை நடந்த நாளில் இருந்து அவர் கூடலூரில் இருந்து வெளியூர் சென்றது தெரியவந்தது. இதனால் தனிப்படை போலீசார் பெங்களூரு உள்பட பல்வேறு இடங்களுக்கு அந்த நபரை தேடி சென்றனர். இந்தநிலையில் கேரள மாநிலம் பாலக்காட்டில் பதுங்கி இருந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்.
ஒருவர் கைது
இதில் கூடலூர் அக்ரஹாரம் தெருவில் பூட்டி கிடந்த வீட்டில் கொள்ளையடித்தது, கூடலூர் லாரஸ்டன் தெய்வமலையை சேர்ந்த ஸ்ரீரங்கன் என்ற அழகர் (வயது 40) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கொள்ளையடித்த 12 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் ஸ்ரீரங்கன் என்ற அழகரை கூடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.