உண்மையாக கட்சி பணி செய்பவர்களுக்கு பதவி தேடி வரும்

உண்மையாக கட்சி பணி செய்பவர்களுக்கு பதவி தேடிவரும் என்று அமைச்சர் ஆர்.காந்தி பேசினார்.;

Update:2022-11-20 23:27 IST

உண்மையாக கட்சி பணி செய்பவர்களுக்கு பதவி தேடிவரும் என்று அமைச்சர் ஆர்.காந்தி பேசினார்.

பொது உறுப்பினர் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் ஆற்காடு அடுத்த வேப்பூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தி தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர்கள் சிவானந்தம், குமுதாகுமார், பொருளாளர் ஏ.வி.சாரதி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சுந்தரம், கண்ணையன், அசோகன், கலைமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அவைத்தலைவர் ஏ.கே..சுந்தரமூர்த்தி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன், மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் வினோத் காந்தி, ஆற்காடு தொகுதி ஜே.எல்..ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

கூட்டத்தில் அமைச்சர் ஆர்.காந்தி பேசியதாவது:-

முன்மாதிரி முதல்-அமைச்சர்

இந்தியாவிலேயே போட்டி இல்லாமல் தலைவராக தேர்வு செய்யப்பட்டவர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டும்தான். ஒவ்வொரு நாளும் புதிய திட்டங்களை அறிவித்து வருகிறார். ஓட்டு போட்டவர்களும், ஓட்டு போடாதவர்களும் சிந்திக்கின்ற வகையில் இந்தியாவின் முன்மாதிரியான முதல்-அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.

தி.மு.க.வில் தொண்டர்கள்தான் கட்டிடங்களின் அடித்தளங்களை போல உள்ளனர். தொண்டர்கள் இல்லாமல் யாரும் இல்லை. தி.மு.க. போன்ற கட்டுப்பாடான இயக்கத்தை எங்கும் பார்க்க முடியாது. கருப்பு, சிவப்பு நமது அடையாளம்.

கட்சியில் தகுதி உள்ள பலர் இருந்தாலும் அமைச்சர் பதவி எனக்கு வழங்கப்பட்டது. தலைவரைப் போல் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டு மக்கள் பணிகளை செய்து வருகிறார்.

பதவிகள் தேடி வரும்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் 40-க்கு 40 என்ற வெற்றியை பெற வேண்டும். அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும்.

பெண்கள் சிந்திக்கும் சக்தி உள்ளவர்கள். பெண்களுக்காக முதல்-அமைச்சர் பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். இதன் மூலம் பெண்களின் 90 சதவீத வாக்குகள் தி.மு.க.வுக்கு கிடைக்கும்.

உண்மையாக கட்சி பணியாற்றுபவர்களுக்கு கட்சியில் பதவிகள் தேடி வரும். தமிழகத்திலேயே ராணிப்பேட்டை மாவட்டம் முன்மாதிரியாக கட்சிப் பணிகளை செய்ய வேண்டும். மாநில சுற்றுசுழல் அணியில் துணைச் செயலாளராக கட்சி பதவி பெற்று வினோத் காந்தி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கட்சி பொறுப்பில் உள்ளவர்கள் சிறப்பாக மக்கள் பணி செய்ய வேண்டும். ஆட்சியின் சாதனைகளை பொதுமக்களுக்கு விளக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், கிளைக் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணைச் செயலாளர் துரைமஸ்தான் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்