மாணவிகளுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி பேட்டை போலீஸ் நிலையத்தை பெற்றோர்கள் முற்றுகை

மாணவிகளுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி, பேட்டை போலீஸ் நிலையத்தை பெற்றோர்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2023-08-28 21:16 GMT

பேட்டை:

நெல்லையை அடுத்த பேட்டை ராணி அண்ணா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 1,200-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு பள்ளி தொடங்கும்போதும், முடியும்போதும், அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் சுற்றி திரியும் சில வாலிபர்கள் மாணவிகளை கேலி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் பள்ளிக்கூட நிறுத்தத்தில் பஸ்கள் முறையாக நின்று செல்லாததாலும், பஸ்கள் தாமதமாக இயக்கப்படுவதாலும், கூட்ட நெரிசலில் சிக்கி மாணவிகள் ஆபத்தான முறையில் படிக்கட்டுகளில் தொங்கியவாறு பயணிக்கின்றனர்.

இதையடுத்து மாணவிகளுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி நேற்று காலையில் பேட்டை போலீஸ் நிலையத்தில் பெற்றோர்கள் திரண்டு முற்றுகையிட்டு புகார் மனு வழங்கினர். பின்னர் அவர்கள் கூறுகையில், ''ஏழை மாணவிகள் கல்வியை தொடரும் வகையில் போலீசார் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். மாணவிகளுக்கு தொந்தரவு தரும் வாலிபர்களை பிடித்து எச்சரிக்க வேண்டும். காலை, மாலையில் பள்ளிக்கூடம் அருகில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும். போதிய அளவில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்'' என்றனர்.

அவர்களிடம், நெல்லை டவுன் உதவி போலீஸ் கமிஷனர் சுப்பையா பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பள்ளிக்கூட பஸ் நிறுத்தம் அருகில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், கூடுதல் பஸ்களை இயக்கவும் ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார். இதையடுத்து பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்