மது போதையில் ரகளை செய்ததால் ஆத்திரம் - வாலிபரை உலக்கையால் அடித்துக்கொன்ற பெற்றோர்

மது போதையில் ரகளை செய்த வாலிபரை பெற்றோர் உலக்கையால் அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;

Update:2024-06-13 07:17 IST

கோப்புப்படம் 

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆலங்குளம் ஊராட்சி அண்ணா நகர் தெற்கு தெருவை சேர்ந்த தச்சுதொழிலாளி சுப்பிரமணியன் (வயது 48). இவருடைய மனைவி பேச்சியம்மாள் (வயது 40). இவர்களது மகள் முத்துமாரி, மகன் அய்யனார் (வயது 20). இதில் முத்துமாரிக்கு திருமணம் ஆகிவிட்டது. அய்யனாருக்கு மதுப்பழக்கம் இருந்ததாகவும், சரிவர வேலைக்கு செல்லவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மதுபாட்டில் வாங்க பணம் கேட்டு தந்தையிடம் அய்யனார் தகராறு செய்துள்ளார். இதை அறிந்து சுப்பிரமணியனின் தம்பி, அய்யனாரை கண்டித்தார்.

ஆத்திரம் அடைந்த அய்யனார், சித்தப்பாவை தாக்கியதுடன், வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்திவிட்டு வெளியே சென்றதாக கூறப்படுகிறது. நள்ளிரவில் மது போதையில் வீட்டிற்கு வந்த அய்யனார் மீண்டும் ரகளை செய்ததுடன், தனது தாயார் பேச்சியம்மாளிடம் தனக்கு மது வாங்க பணம் தரும்படியும், வீட்டை விற்று அதில் இருந்து ரூ.5 லட்சத்தை தரும்படியும் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த சுப்பிரமணியன் வீட்டில் இருந்த விறகு கட்டையால் அய்யனாரை தாக்கினார். அப்போது அய்யனார், தந்தை சுப்பிரமணியனை தாக்க முயன்றார். இதை தடுக்க பேச்சியம்மாள், உலக்கையை எடுத்து வந்து அய்யனார் தலையில் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்து அய்யனார் மயங்கி விழுந்தார். வழக்கம் போல் போதையில் கிடப்பதாக நினைத்து சுப்பிரமணியன், பேச்சியம்மாள் ஆகியோர் தூங்க சென்றனர்.

மறுநாள் காலையில் பார்த்த போது, அய்யனார் இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியன், பேச்சியம்மாளை கைது செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்