விபத்தில் வேன் உரிமையாளர் சாவு
பாவூர்சத்திரத்தில் நடந்த விபத்தில் வேன் உரிமையாளர் இறந்தார்.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரத்தில் நெல்லை- தென்காசி நான்கு வழிச்சாலையில் ஒருவர் இறந்து கிடப்பதாக அவ்வழியே சென்ற பொதுமக்கள் பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். அதனை தொடர்ந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இதுதொடர்பாக நடத்திய விசாரணையில், பிணமாக கிடந்தவர் கீழப்பாவூர் தேவர் கீழ தெருவை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் காசிவிஸ்வநாதன் (வயது 38) என்பது தெரியவந்தது. வேன் உரிமையாளரான இவர் நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளில் பாவூர்சத்திரம் மார்க்கெட் அருகே நெல்லை- தென்காசி சாலையில் வந்தபோது சாலையோரம் நின்ற மின்கம்பத்தின் மீது மோதியதில் படுகாயங்களுடன் சம்பவ இடத்திலேயே இறந்தது தெரியவந்தது.