சிறையில் இருக்கும் மற்ற 6 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்

பேரறிவாளனை விடுதலை செய்ததை வரவேற்பதாகவும் அதேபோல் மற்ற 6 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் தஞ்சையில் பழ.நெடுமாறன் கூறினார்.

Update: 2022-05-18 20:25 GMT

தஞ்சாவூர்:

பேரறிவாளனை விடுதலை செய்ததை வரவேற்பதாகவும் அதேபோல் மற்ற 6 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் தஞ்சையில் பழ.நெடுமாறன் கூறினார்.

வரவேற்கிறோம்

உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தஞ்சையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளுக்கு முன்பு 17 வயதான பேரறிவாளன் சம்பந்தப்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். இப்போது அவருக்கு 48 வயது ஆகிறது. தற்போது சுப்ரீம் கோர்ட்டின் மூலம் விடுதலை செய்யப்பட்டு சுதந்திர காற்றை சுவாசிக்க உள்ளார். சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை வரவேற்கிறோம்.

6 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்

இந்த தீர்ப்பின் மூலம் இதே வழக்கில் 31 ஆண்டுகளாக சிறையில் இருக்கக்கூடிய மற்ற 6 பேரையும் விடுதலை செய்ய வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்வார் என்று நான் நம்புகிறேன்.

மேலும் தமிழக சிறையில் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளவர்களையும், இஸ்லாமிய சகோதரர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என இந்த அரசை கேட்டுக்கொள்கிறேன்.

மனிதாபிமான கடமை

31 ஆண்டுகள் சிறையில் இருந்த பேரறிவாளனின் வாழ்க்கைக்கு மத்திய, மாநில அரசுகள் உதவ முன்வர வேண்டும். இது அரசின் மனிதாபிமான கடமையாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு தஞ்சையில் பல்வேறு அமைப்பினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இடதுசாரி பொது மேடை அமைப்பின் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்