குளத்தில் தவறி விழுந்து முதியவர் சாவு
குளத்தில் தவறி விழுந்து முதியவர் இறந்தார்.
ஆரணி
குளத்தில் தவறி விழுந்து முதியவர் இறந்தார்.
ஆரணியை அடுத்த பையூர் எத்திராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 65). இவர் மனைவியை இழந்து தற்போது மகள் கீதாவுடன் வசித்து வருகிறார். கடந்த 27-ந் தேதி மகள் கீதாவிடம் ரூ.1,000 வாங்கிக்கொண்டு திருப்பதி செல்வதாக கூறிச்சென்றார்.
அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் நேற்று காலை பையூர் பாறை குளத்தில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஆரணி தாலுகா போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்தினர் அங்கு சென்று பாறை குளத்தில் பிணமாக கிடந்த முதியவரின் உடலை மீட்டனர்.
விசாரணையில் அவர் பையூர் எத்திராஜ் நகர் பகுதி சேர்ந்த சங்கர் என்பது தெரியவந்தது. குளத்தில் கால் கழுவுவதற்காக சென்றபோது கால் தவறி குளத்தில் விழுந்து இறந்து இருக்கலாம் என கருதப்படுகிறது. இது சம்பந்தமாக மகள் கீதா ஆரணி தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் ஆரணி தாலுகா போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மீனாட்சிசுந்தரம் வழக்குப்பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.