லாரி மோதி முதியவர் பலி

மோகனூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி முதியவர் இறந்தார். கோவிலுக்கு சென்று திரும்பிய போது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

Update: 2023-04-06 18:45 GMT

மோகனூர்

கோவிலுக்கு சென்றனர்

திருச்சி மாவட்டம் தொட்டியம், தாலுகா காட்டுப்புத்தூர் அருகே உள்ள நாகைநல்லூர் அடுத்த கருங்காடு பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 39). இவர் மேஸ்திரி ஆக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது சித்தப்பா நல்லுசாமி (60) என்பவரை அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் அரூரில் உள்ள கோவிலுக்கு சென்றார்.

பின்னர் அங்கு சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் தனது சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அரூர் மாரியம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மினி லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு விழுந்த 2பேரும் பலத்த காயம் அடைந்தனர். அதைப்பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் லட்சுமணனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

முதியவர் சாவு

படுகாயம் அடைந்த நல்லுசாமியை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் நல்லுசாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தொிவித்தனர். இது குறித்து லட்சுமணன் மோகனூர் போலீசில் புகார் கொடுத்தார்.

இதன் பேரில் மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் சப்-இன்ஸ்பெக்டர் இளைய சூரியன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து நல்லுசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்