கூடுதல் கட்டணம் கேட்ட ஆட்டோ டிரைவரை தாக்கிய வடமாநில தொழிலாளர்கள்

கூடுதல் கட்டணம் கேட்டதால் ஆட்டோ டிரைவரை இரும்பு கம்பியால் தாக்கிய வடமாநில தொழிலாளர்களை பொதுமக்கள் மடக்கி பிடிக்க முயன்றனர். அப்போது பொதுமக்களையும் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-02-16 08:27 GMT

சென்னை சென்டிரலில் இருந்து ஆட்டோவில் மேற்கு தாம்பரம் வரை வடமாநிலத்தை சேர்ந்த 2 தொழிலாளர்கள் கட்டுமான பொருட்களுடன் வந்தனர். ஆட்டோவை சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ஹரிதாஸ் (வயது 42) என்பவர் ஓட்டி வந்தார்.

மேற்கு தாம்பரம் வந்ததும், வடமாநில தொழிலாளர்கள் கிழக்கு தாம்பரத்தில் தாங்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த புதிய வணிக வளாக மையம் வரை அவரை அழைத்துச்சென்றனர்.

இதனால் ஆட்டோ டிரைவர் ஹரிதாஸ், பேசியதை விட அதிக தூரம் அழைத்து வந்ததால் தான் கேட்ட தொகையை விட கூடுதலாக 50 ரூபாய் தரும்படி வடமாநில தொழிலாளர்களிடம் கேட்டார். ஆனால் அவர்கள் பணம் தர மறுத்ததால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த வடமாநில தொழிலாளர்கள் இருவரும் சேர்ந்து தங்களிடம் இருந்த இரும்பு கம்பியால் ஆட்டோ டிரைவர் ஹரிதாசை சரமாரியாக தாக்கினர். இதில் அவரது கை, கால்களில் பலத்த காயம் அடைந்தார். வலியால் அவர் அலறி துடித்தார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்த பொதுமக்கள் ஓடிவந்து வடமாநில தொழிலாளர்களை மடக்கி பிடிக்க முயன்றனர். அப்போது அவர்களையும் இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு இருவரும் தப்பி ஓடினர். அவர்களில் ஒருவரை மட்டும் பொதுமக்கள் மடக்கிப்பிடித்து தர்மஅடி கொடுத்து சேலையூர் போலீசில் ஒப்படைத்தனர். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார்.

பிடிபட்டவரை போலீசார் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர். அதில் அவர், டெல்லியை சேர்ந்த முகமது அஷ்ரப் கான் (39) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய அவரது கூட்டாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

வடமாநில தொழிலாளர்கள் தாக்கியதில் காயம் அடைந்த ஆட்டோ டிரைவர் ஹரிதாஸ், குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

வடமாநில தொழிலாளர்களால் ஆட்டோ டிரைவர் தாக்கப்பட்டதை அறிந்ததும் அந்த பகுதிைய சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் சிலர் சேலையூர் போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்தனர். இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர்.

இந்த சம்பவத்தால் தாம்பரம்-வேளச்சேரி சாலையில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்