புதுமண தம்பதி வெட்டிக்கொலை

எட்டயபுரம் அருகே காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

Update: 2022-07-25 15:19 GMT

எட்டயபுரம்:

எட்டயபுரம் அருகே காதல் திருமணம் செய்த 26 நாளில் புதுமண தம்பதி வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட பெண்ணின் தந்தையை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கல்லூரி மாணவி

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே வீரப்பட்டி கிராமத்தில் ஆர்.சி. தெரு சேவியர் காலனியைச் சேர்ந்தவர் முத்துகுட்டி (வயது 50). விவசாயியான இவர், சொந்தமாக வேன், மினி லாரி போன்றவற்றை வாங்கி வாடகைக்கு விட்டு தொழில் செய்து வந்தார்.

இவருடைய மகள் ரேஷ்மா (20). இவர் கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர், அப்பகுதியில் தனது வீட்டின் எதிர் வீட்டில் வசித்த உறவினரான வடிவேல் மகன் மாணிக்கராஜை (26) காதலித்து வந்தார்.

காதல் திருமணம்

மாணிக்கராஜ், கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர்களின் காதலுக்கு முத்துகுட்டி எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் தனது மகளுக்கு மற்றொரு வரன் பார்த்து திருமண நிச்சயம் செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து கடந்த மாதம் 29-ந்தேதி மாணிக்கராஜிம், ரேஷ்மாவும் தங்களது ஊரில் இருந்து வெளியேறி, மதுரையில் உள்ள உறவினரின் வீட்டுக்கு ெசன்று திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் அங்கேயே வசித்தனர்.

புதுமண தம்பதி வெட்டிக்கொலை

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணிக்கராஜ் காதல் மனைவியுடன் சொந்த ஊரில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார். அவர்கள் மாணிக்கராஜின் பெற்றோருடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர்.

நேற்று காலையில் மாணிக்கராஜின் தாயார் மகாலட்சுமி, தேசிய ஊரக வேலைக்கு சென்று விட்டார். அவரது வீட்டில் புதுமண தம்பதி மாணிக்கராஜ்-ரேஷ்மா மட்டும் இருந்தனர்.

பின்னர் மாலையில் வேலை முடிந்ததும் மகாலட்சுமி தனது வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டில் தனது மகன் மாணிக்கராஜ், மருமகள் ரேஷ்மா ஆகிய 2 பேரும் பலத்த அரிவாள் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து எட்டயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ், எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர்முகம்மது மற்றும் ேபாலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

கொலை செய்யப்பட்ட புதுமண தம்பதியின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மகளின் தந்தைக்கு வலைவீச்சு

விசாரணையில், மகளின் காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த முத்துகுட்டி ஆத்திரத்தில் புதுமண தம்பதியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தது தெரிய வந்தது. முத்துகுட்டியின் வீடு பூட்டிக் கிடந்தது. அந்த வீட்டில் ரத்தக்கறையுடன் இருந்த அரிவாளை போலீசார் கைப்பற்றினர்.

மேலும் தலைமறைவான முத்துகுட்டியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். எட்டயபுரம் அருகே மகளின் காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயி, 25 நாளில் புதுமண தம்பதியை வெட்டிக்கொலை செய்த பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்