புதிதாக அமையும் மத்திய அரசு கச்சத்தீவை மீட்க வேண்டும் - வி.கே.சசிகலா

மத்திய அரசின் துணையோடு கச்சத்தீவை மீட்பதும், இலங்கை தமிழர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படுவதும் உறுதி என்று வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.

Update: 2024-04-02 16:49 GMT

கோப்புப்படம்

சென்னை,

வி.கே.சசிகலா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கச்சத்தீவு இந்திய மண்ணிற்கு சொந்தமானது. இலங்கைக்கு தாரை வார்த்தது செல்லத்தக்கதல்ல. கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும் என தன் இறுதிமூச்சு வரை போராடியவர் ஜெயலலிதா. கச்சத்தீவை தாரை வார்த்ததில் முக்கிய அங்கமாக விளங்கிய தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சியினர். இன்றைக்கு அனைத்தையும் வசதியாக மறைத்து விட்டு, தமிழக மக்களை தற்போது எப்படியாவது ஏமாற்றிவிடலாம் என்று பகல் கனவு காண்கிறார்கள்.

எனவே, கச்சத்தீவை பற்றி பேச தி.மு.க.வினருக்கு அருகதை கிடையாது. தி.மு.க.வினர் என்னதான் உண்மையை மூடி மறைக்கப்பார்த்தாலும், அந்த முயற்சியில் தோல்வியைத்தான் அடைவார்கள்.

கச்சத்தீவு என்பது தமிழக மக்களின் வாழ்வாதார உரிமை சம்பந்தப்பட்டது. இது வெறும் தேர்தல் நேரத்திற்கு மட்டும் எடுத்துக்கொள்ளப்படும் பிரச்னை அல்ல என்பதை அனைவரும் உணரவேண்டும் கச்சத்தீவு மீட்கப்படவேண்டும் என ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சிகள் என்றைக்கும் வீண் போகாது. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தையும். பாதுகாப்பினையும் உறுதி செய்திடும் வகையில் புதிதாக அமையவுள்ள மத்திய அரசு கச்சத்தீவை மீட்டெடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

இதனை வெற்றிகரமாக செயல்படுத்தக்கூடிய வகையில் ஒரு வலுவான, நிலையான மத்திய அரசாங்கம் தற்போது தேவைப்படுகிறது. அதேபோன்று. இந்தியாவின் உரிமைகளை பாதுகாக்கக்கூடிய, இந்திய மக்களின் மீது அக்கறை கொண்ட ஒரு வலிமையான பிரதமரையும் நாம் தேர்தெடுக்க போகிறோம். அவ்வாறு தேர்தெடுக்கப்படும் உறுதியான பிரதமரை கொண்டு புதிதாக அமையவுள்ள மத்திய அரசின் துணையோடு கச்சத்தீவை மீட்பதுடன், இலங்கை தமிழர்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags:    

மேலும் செய்திகள்