விருந்துக்கு வந்த புதுப்பெண் மயங்கி விழுந்து சாவு

கீழ்பென்னாத்தூர் அருகே திருமணமான 6-வது நாளில் விருந்துக்கு வந்த புதுப்பெண் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-09-14 18:54 GMT

கீழ்பென்னாத்தூர் அருகே திருமணமான 6-வது நாளில் விருந்துக்கு வந்த புதுப்பெண் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

திருமணம்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள செவரப்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகள் சந்தியா (வயது 20). இவருக்கும், விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டை அருகே உள்ள குந்தலம்பட்டு கிராமத்தை சேர்ந்த சின்னசாமி மகன் முருகன் (35) என்பவருக்கும் கடந்த 9-ந் தேதி திருமணம் நடந்தது. முருகன் கட்டிட மேஸ்திரியாக் வேலை செய்து வருகிறார்.

கடந்த 12-ந்தேதி சந்தியா தனது கணவர் முருகனுடன் செவரப்பூண்டிக்கு விருந்துக்கு வந்திருந்ததாக கூறப்படுகிறது.

நேற்று நடைபெறுவதாக இருந்த விருந்துக்கு முருகனின் தாய், தந்தை ஆகியோரும் வந்திருந்தனர். இந்த நிலையில், நேற்று காலை சந்தியா வீட்டில் குளித்துவிட்டு உடைமாற்றி கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

பரிதாப சாவு

உடனே வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சந்தியா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து சின்னதுரை கீழ்பென்னாத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை வழக்குப்பதிவு செய்தார்.

திருமணமான 6 நாளில் சந்தியா இறந்ததால், உதவி கலெக்டர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்